விவசாயிகளுக்கு எதிரான வழக்குகளை திரும்ப பெற வேண்டும்... பிரதமர் மோடியை வலியுறுத்திய பிரியங்கா காந்தி

 
பிரியங்கா காந்தி

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு எதிரான வழக்குகளை திரும்ப பெறவும், இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும் பிரதமர் மோடியை பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: லக்னோவில் நடைபெறும் டி.ஜி.பி. மற்றும் ஐ.ஐி. மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ளக் கூடாது. இது குறித்து அவருக்கு கடிதம் எழுதியுள்ளேன். விவசாயிகள் மீது அவருக்கு (மோடி) உண்மையான அக்கறை இருந்தால், லக்கிம்பூர் கெரி சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவரின் தந்தையான மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவுடன் மேடையில் பகிர்ந்து கொள்ளக் கூடாது.

மோடி

லக்கிம்பூரில் விவசாயிகளை மோதி கொன்ற நபர் மத்திய உள்துறை இணையமைச்சரின மகன் என்றும், அரசியல் அழுத்தம் காரணமாக உத்தர பிரதேச அரசு நீதியை நசுக்க முயற்சித்தது என்றும் பிரதமர் மோடிக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். குடும்பத்தினர் (லக்கிம்பூர் கெரி சம்பவத்தில் பலியான விவசாயிகளின் குடும்பத்தினர்) நீதியை விரும்புகிறார்கள். அவர் (மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா) பதவியில் தொடர்ந்தால் நீதி வழங்க முடியாது.

அஜய் குமார் மிஸ்ரா

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு எதிரான வழக்குகளை திரும்ப பெறவும், இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும் பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த வெள்ளிக்கிழமையன்று மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவித்தார். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் உடனடியாக வீட்டுக்கு செல்லும்படி வலியுறுத்தினார்.