குரல் எழுப்பியதற்காக ஆஷா சகோதரிகள் அடித்து அவமானப்படுத்தப்படுகிறார்கள்.. பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

 
பிரியங்கா காந்தி

உத்தர பிரதேசத்தில் இரவு பகலாக பணியாற்றிய ஆஷா சகோதரிகள் குரல் எழுப்பியதற்காக   போலீசாரால் அடித்து அவமானப்படுத்தப்படுகிறார்கள் என்று பிரியங்கா காந்தி குற்றச்சாட்டினார்.

உத்தர பிரதேசம் ஷாஜஹான்பூரில் ஆஷா (அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள்) பணியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். அப்போது  போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பலவந்தமாக போலீசார் அப்புறப்படுத்தினர். இதில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று இந்த போராட்டத்தில் காயம் அடைந்த ஆஷா பணியாளர்களை சந்தித்து பேசினார். இது தொடர்பாக டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

ஆஷா பணியாளரின் காயத்தை பார்க்கும் பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தி டிவிட்டரில்தொடர்ச்சியான டிவிட்டில், இன்று (நேற்று) நான் ஷாஜஹான்பூரில் காவல்துறையால் சித்தரவதை செய்யப்பட்ட ஆஷா சகோதரிகளை சந்தித்தேன். முதல்வர் கூட்டத்துக்கு வெளியே தங்களது கோரிக்கைகளை எழுப்பியதற்காக அவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர். கொரோனாவின் போதும், தடுப்பூசி போடும் போதும், பிரசவத்தின் போதும் மற்றும் பிற சந்தர்ப்பங்களில் இரவும், பகலும் பணியாற்றி கொண்டு இருந்தனர்.

ஆஷா பணியாளர்களுடன் பேசிய பிரியங்கா காந்தி

ஆனால் இன்று மாநிலம் முழுவதும் அவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். இவர்களின் கவுரவ ஊதியம் குறைவு, உரிய நேரத்தில் கிடைக்கவில்லை, ஊழல், குரல் எழுப்பியதற்காக அவர்கள் அடித்து அவமானப்படுத்தப்படுகிறார்கள். ஆஷா சகோதரிகளே, நீங்கள் மரியாதை மற்றும் நல்ல கவுரவத்திற்கு தகுதியானவர்கள். இந்த போராட்டத்தில் தோளோடு தோள் நின்று உங்களுடன் நிற்கிறேன் இவ்வாறு அவர் பதிவு செய்துள்ளார்.