அனுமதி பெறாமல் சட்டங்கள் இயற்றப்படுவதும், உருவாக்கப்படாமல் இருப்பதும் பா.ஜ.க. ஆட்சியில்தான் நடக்கிறது.. ப.சிதம்பரம்

 
ப சிதம்பரம்

மத்திய அமைச்சரவையின் முன் அனுமதி பெறாமல் சட்டங்கள் இயற்றப்படுவதும், உருவாக்கப்படாமல் இருப்பதும் பா.ஜ.க. ஆட்சியில்தான் உள்ளது என்று ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த வெள்ளிக்கிழமையன்று சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார். மேலும், 3 வேளாண் சட்டங்களின் நன்மைகள் தொடர்பான உண்மை குறித்து விவசாயிகளின் ஒரு பகுதியினரை புரிய வைக்க முடியாத தனது அரசாங்கத்துக்காக பொதுமக்களிடம் மோடி மன்னிப்பு கேட்டார். இந்நிலையில், வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக மோடி அறிவித்ததை ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

மோடி

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டிவிட்டரில், அமைச்சரவை கூட்டத்தை நடத்தாமல் பிரதமர் மோடி அறிவித்ததை கவனித்தீர்களா? மத்திய அமைச்சரவையின் முன் அனுமதி பெறாமல் சட்டங்கள் இயற்றப்படுவதும், உருவாக்கப்படாமல் இருப்பதும் பா.ஜ.க. ஆட்சியில்தான் உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் (அமித் ஷா) பிரதமரின் அறிவிப்பு குறிப்பிடத்தக்க அரசாட்சித் திறனை காட்டுவதாக பாராட்டினார்.

பா.ஜ.க.

விவசாயிகள் மீது பிரதமருக்கு மிகுந்த அக்கறை உள்ளது என்று பா.ஜ.க. தலைவர் கூறினார். விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பிரதமர் இந்த முடிவை எடுத்ததாக பாதுகாப்பு துறை அமைச்சர் கூறினார். கடந்த 15 மாதங்களில் இந்த தகுதியான தலைவர்கள் மற்றும் அவர்களின் புத்திசாலித்தனமான ஆலோசனைகள் எங்கே இருந்தது? என்று பதிவு செய்துள்ளார்.