என்.பி.ஆர்., என்.ஆர்.சி. தொடர்பாக அரசாங்கம் சட்டம் இயற்றினால் நாங்கள் மீண்டும் தெருவில் இறங்குவோம்.. அசாதுதீன் ஓவைசி

 
நாட்டின் முக்கிய பிரச்சனை வேலைவாய்ப்பின்மைதான்….. மக்கள்தொகை அல்ல……ஆர்.எஸ்.எஸ்.தலைவருக்கு அசாதுதீன் ஓவைசி பதில்…

தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) தொடர்பாக அரசாங்கம் சட்டம் இயற்றினால் நாங்கள் மீண்டும் தெருவில் இறங்குவோம் என்று மத்திய அரசுக்கு அசாதுதீன் ஓவைசி எச்சரிக்கை செய்துள்ளார்.

உத்தர பிரதேசம் பாரபுங்கியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவரும், ஹைதராபாத் நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அசாதுதீன் ஓவைசி பேசுகையில் கூறியதாவது: குடியுரிமை திருத்த சட்டத்தை (சி.ஏ.ஏ.) திரும்ப பெற வேண்டும் என்று பா.ஜ.க. அரசாங்கத்திடம் நான் கோருகிறேன். வேளாண் சட்டங்களை ரத்து செய்யப்பட்டதைப் போலவே சி.ஏ.ஏ. ரத்து செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

பா.ஜ.க.

தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) தொடர்பாக அரசாங்கம் சட்டம் இயற்றினால் நாங்கள் மீண்டும் தெருவில் இறங்குவோம். இங்கேயும் ஷாஹீன் பாக்கை உருவாக்குவோம். நானே இங்கு வருவேன். விவசாயிகளுக்கு  அரசின் மீது நம்பிக்கை இல்லை, நாடாளுமன்றம் தொடங்கி மசோதா தாக்கல் செய்யப்பட்டதும் முடிவு (வீட்டுக்கு திரும்பி செல்வது குறித்து) செய்வோம் என கூறுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தேசிய மக்கள்தொகை பதிவேடு

லக்னோவில் செய்தியாளர்களிடம்  அசாதுதீன் ஓவைசி பேசுகையில், எங்கள் கட்சி எதிர்வரும் உத்தர பிரதேச தேர்தலில் 100 இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளது. இன்னும் ஒரிரு கட்சிகளுடன் பேசி வருகிறோம். கூட்டணி அமைக்கலாமா, வேண்டாமா என்பதை காலம் தீர்மானிக்கும். தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி என்று தெரிவித்தார்.