சி.ஏ.ஏ. ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை.. அரசியல் நாடகம் தொடங்கி விட்டது.. முக்தர் அப்பாஸ் நக்வி

 
தெருவில் வன்முறையை உருவாக்கி… நாடாளுமன்றத்தில் போராடுகிறார்கள்….எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை சாடிய மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி….

குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ.), சிறப்பு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை நீக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்ததை குறிப்பிட்டு அரசியல் நாடகம் தொடங்கி விட்டது என்று முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த வெள்ளிக்கிழமையன்று சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார். மேலும், 3 வேளாண் சட்டங்களின் நன்மைகள் தொடர்பான உண்மை குறித்து விவசாயிகளின் ஒரு பகுதியினரை புரிய வைக்க முடியாத தனது அரசாங்கத்துக்காக பொதுமக்களிடம் மோடி மன்னிப்பு கேட்டார். இதனை தொடர்ந்து சி.ஏ.ஏ. மற்றும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை நீக்க வேண்டும் என்று சிலர் கோரிக்கை விடுத்தனர். இதனை அரசியல் நாடகம் தொடங்கி விட்டது என்று பா.ஜ.க. அமைச்சர் விமர்சனம் செய்துள்ளார்.

மோடி

மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியதாவது: அரசியல் நாடகம் தொடங்கி விட்டது. குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ.), சிறப்பு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை நீக்கப்பட வேண்டும் என்று யாரோ கூறுகிறார்கள். சி.ஏ.ஏ. என்பது குடியுரிமை பறிப்பது அல்ல, வங்க தேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவது என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும்.

குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டம் (கோப்புப்படம்)

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் மூலம், ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக்கில் பல பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன. மக்கள் முக்கிய நீரோட்டத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர்களும் அரசியல் செயல்முறையின் ஒரு பகுதியாக மாறி வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.