தேர்தல் நெருங்கும்போது மகாபாரதம் போன்ற இதிகாசங்களை நினைவுப்படுத்தும் அரசியல் கட்சி.. காங்கிரசை தாக்கிய பா.ஜ.க.

 
காங்கிரஸ்

தேர்தல் நெருங்கும்போது  மகாபாரதம் போன்ற இந்து இதிகாசங்களை நினைவுப்படுத்தும் அரசியல் கட்சி என்று காங்கிரஸ் கட்சியை மத்திய அமைச்சர் முக்தர்  அப்பாஸ் நக்வி தாக்கினார்.

எதிர்வரும் உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு காங்கிரஸ் சக்தி சம்வாத் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. சித்ரகூடில் நடந்த சக்தி சம்வாத பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேசுகையில், திரௌபதியே கேள், உன்னை காத்துக் கொள்ள ஆயுதம் எடு. உன்னை காப்பாற்ற எந்த கிருஷ்ணரும் வரவில்லை. துச்சாதனன் நீதிமன்றத்தில் என்ன வகையான பாதுகாப்பு கேட்பீர்கள். ஏற்கனவே விற்கப்பட்ட செய்திதாள்களின் நீதிக்காக எவ்வளவு காலம் காத்திருப்பீர்கள் என்று தெரிவித்தார்.

பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தி மகாபாரதத்தை குறிப்பிட்டு பேசியதை மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி விமர்சனம் செய்துள்ளார். மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி இது தொடர்பாக கூறியதாவது: தேர்தல் நெருங்கும்போதுதான் ராமாயணம், மகாபாரதம் போன்ற இந்திய புராணங்களை நினைவுப்படுத்தும் அரசியல் கட்சிகள் இவை. தேர்தல் முடிந்தவுடனேயே அவற்றின் நற்பண்புகள், கலாச்சாரங்களை மறந்து விடுகின்றன.

முக்தர் அப்பாஸ் நக்வி

இந்த நேரத்தில், இந்த கட்சிகள் இந்திய வரலாற்றில் கேள்விகளை எழுப்புகின்றன. ஆனால் இப்போது தேர்தல்கள் வந்துள்ளன, அவர்கள் அனைத்தையும் நினைவில் வைத்திருப்பார்கள். காங்கிரஸ் கட்சியினர் எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை கூட அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. கட்சி தலைவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஒரே பிரச்சினை குறித்து பல தலைவர்கள் வெவ்வேறு அறிக்கைகளை வெளியிடுகின்றனர். ஒரு கட்சியில் தலைமையில் வெற்றிடம் ஏற்படும் போதெல்லாம் இது நிகழ்கிறது. இது காங்கிரஸில் தற்போது காணக்கூடிய ஒன்று. இவ்வாறு அவர் தெரிவித்தார்.