ஊடகத்துறையினர் கவனமாக பணியாற்ற வேண்டும்! – ராஜ் டி.வி ஒளிப்பதிவாளர் மறைவுக்கு வைகோ, டி.டி.வி.தினகரன் இரங்கல்

 

ஊடகத்துறையினர் கவனமாக பணியாற்ற வேண்டும்! – ராஜ் டி.வி ஒளிப்பதிவாளர் மறைவுக்கு வைகோ, டி.டி.வி.தினகரன் இரங்கல்

கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்த ராஜ் டிவி ஒளிப்பதிவாளர் வேல்முருகனுக்கு வைகோ, டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ராஜ் டிவி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் கொரோனா தொற்று ஏற்பட்டு, ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

ஊடகத்துறையினர் கவனமாக பணியாற்ற வேண்டும்! – ராஜ் டி.வி ஒளிப்பதிவாளர் மறைவுக்கு வைகோ, டி.டி.வி.தினகரன் இரங்கல்
கொரோனா தொற்று காலத்திலும் செய்திகளை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இந்நிலையில்தான் அவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. வேல்முருகன் 20 ஆண்டுகள் ஊடகத் துறையில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்திருக்கிறார்.
ஊடகத்துறையில் பணியாற்றுபவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு பணியாற்ற வேண்டும் என்பதை வேல்முருகனுடைய இழப்பு நமக்கு உணர்த்துகிறது. ஊடகத் துறையில் பணியாற்றுகின்ற அனைத்துத் தோழர்களுக்கும், அவர்கள் சார்ந்த நிறுவனமும், அரசும் உரிய நோய்த் தடுப்புப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வழிகாட்ட வேண்டும்.

வேல்முருகனை இழந்து வாடும் மனைவி, குடும்பத்தார் மற்றும் ஊடகத் துறையைச் சேர்ந்த தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.அவரது மனைவி சண்முகசுந்தரி ஒப்பந்த அடிப்படையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார். உயிரிழந்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் குடும்பத்திற்கு ஒளியேற்றும் வகையில், சண்முகசுந்தரியை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.


டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள ட்வீடில், “மூத்த ஒளிப்பதிவாளர் திரு.வேல்முருகன் கொரோனா பாதிப்பினால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து வருத்தமுற்றேன். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நெருக்கடியான நேரத்தில் ஊடகத்துறையினர் மிகுந்த கவனத்துடன் பணியாற்றுவதுடன், உடல்நலத்திலும் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.