பா.ஜ.க.வை தோற்கடிப்பதே எங்களது முன்னுரிமையான விஷயம்... மம்தா பானர்ஜி

 
மம்தா பானர்ஜி

பா.ஜ.க.வை தோற்கடிப்பதே எங்களது முதன்மையான விஷயம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி டெல்லிக்கு 3 நாள் பயணமாக நேற்று சென்றுள்ளார். வரும் 25ம் தேதி வரை மம்தா பானர்ஜி டெல்லியில்தான் இருப்பார். நேற்று டெல்லியில் மம்தா பானர்ஜி முன்னிலையில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் முன்னாள் மாநிலங்களவை எம்.பி. பவன் வர்மா, காங்கிரஸ் தலைவர்கள் கீர்த்தி ஆசாத், அசோக் தன்வார் ஆகியோர் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தனர்.

பா.ஜ.க.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: நான் ஹரியானா செல்ல விரும்புகிறேன். டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா என்ற வித்தியாசம் இல்லை. அசோக் தன்வார் என்னை அழைத்ததால் விரைவில் அங்கு செல்வேன். மாநிலங்கள் வளர்ச்சி அடையாத வரை நாடு முன்னேறாது. பா.ஜ.க.வை தோற்கடிப்பதே எங்களது முதன்மையான விஷயம்.

திரிணாமுல் காங்கிரஸ்

ஜெய் இந்துஸ்தான், ஜெய் ஹரியானா, ஜெய் வங்கம், ஜெய் கோவா, ஜெய் பாரத், ராம் ராம். இவ்வாறு அவர் தெரிவித்தார். அண்மையில் நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் 200க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை தக்கவைத்து கொண்டது. இதனையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் மற்ற மாநிலங்களிலும் காலூன்றும் நடவடிக்கையை  தொடங்கி விட்டது. மேலும் மம்தா பானர்ஜியை தேசிய தலைவராக உருவாக்கும் பணியையும் திரிணாமுல் காங்கிரஸ் மேற்கொண்டுள்ளது.