கேரளா மெல்ல சிரியாவாக மாறி வருகிறது... மாநில பா.ஜ.க. தலைவர் எச்சரிக்கை

 
கே.சுரேந்திரன்

கேரளா மெல்ல சிரியாவாக மாறி வருகிறது, கேரள காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்  என்று கேரள பா.ஜ.க. தலைவர் கே.சுரேந்திரன் குற்றம் சாட்டினார்.

கேரளாவின் பாலக்காடு மாவட்டம் எலப்புலி பகுதியை சேர்ந்தவர் பிரமுக் சஞ்ஜித். ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரான சஞ்ஜித் கடந்த 15ம் தேதியன்று தனது மனைவியுடன் பாலக்கோடு-திரிச்சூர் நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் மர்ம கும்பல் ஒன்று சஞ்ஜித் பைக்கை வழிமறித்து அவரது மனைவி கண் முன்னே சஞ்ஜித்தை பயங்கர ஆயுதங்களால் கொடூரமாக வெட்டியது. சம்பவ இடத்திலேயே சஞ்ஜித் துடிதுடித்து இறந்தார். இதனையடுத்து கொலைக்கார கும்பல் அங்கியிருந்து தப்பியோடியது. இந்த சம்பவம் கேரளாவில் மட்டுமல்ல நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

கொலை செய்யப்பட்ட சஞ்ஜித்

இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். சஞ்ஜித் கொலை வழக்கில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முக்கிய நிர்வாகி ஒருவரை பாலக்காடு போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கேரள பா.ஜ.க. செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியது. அப்போது கேரள பா.ஜ.க. தலைவர் கே.சுரேந்திரன் கூறியதாவது:  கேரளா மெதுவாக சிரியாவாக மாறி வருகிறது. மேலும் இந்த மதிப்பீடு மாநிலத்தில் உள்ள சாமானியர்களின் பொதுவான அவதானிப்பு. பாப்புலர் பிரண்ட் ஆப்  இந்தியா (பி.எப்.ஐ.) மற்றும் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே ரகசிய தொடர்பு மற்றும் புரிந்துணர்வு உள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்

மாநிலத்தில் தீவிரவாத அமைப்புகளுக்கு காங்கிரஸ் மற்றும் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு அளித்து வருகிறது. பி.எப்.ஐ. மற்றும் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் நாட்டை பிளவுபடுத்த முயற்சி செய்கின்றன. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மற்றும் தலைவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது. குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த மாநில அரசு செயல்படவில்லை. கேரள காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். நாங்கள் நேற்று (நேற்று முன்தினம்) உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து அவருடன் இந்த விஷயத்தை பற்றி விவாதித்தோம். மேலும் அடிப்படை உண்மைகளை அவருக்கு விளக்கினோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.