பஞ்சாபில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000... அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி

 
தேவையில்லாமல் வாய் விட்டு சிங்கப்பூரிடம் வாங்கி கட்டிக்கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால்!

பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால், 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அவரது வங்கி கணக்கில் மாதந்தோறும் ரூ.1,000 டெபாசிட் செய்யப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார்.

2022 தொடக்கத்தில் 117 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில்,  ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மிஷன் பஞ்சாப் திட்டத்தை தொடங்குவதற்காக 2 நாள் பயணமாக நேற்று பஞ்சாப் சென்றார்.

பெண்கள்

பஞ்சாபின் மோகாவில் நேற்று  நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில் கூறியதாவது: 2022ல் பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால், 18 வயதுக்கு மேற்பட்ட பஞ்சாபில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 அவரது வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும். ஒரு குடும்பத்தில் 3 பெண் உறுப்பினர்கள் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் மாதம் தலா ரூ.1,000 டெபாசிட் செய்யப்படும். இது உலகின் மிகப்பெரிய பெண்கள் அதிகாரமளிக்கும் திட்டமாக இருக்கும்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சரண்ஜித் சிங் சன்னி

மேலும் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை கெஜ்ரிவால்  கடுமையாக நக்கல் அடித்தார். நாட்டில் மின்கட்டணத்தை பூஜ்யத்துக்கு கொண்டு வரக்கூடிய ஒரே நபர் அவர்தான் (சரண்ஜித் சிங் சன்னி).  பஞ்சாபில் ஒரு போலி கெஜ்ரிவால் (சரண்ஜித் சிங் சன்னி) சுற்றித் திரிகிறார். நான் இங்கு என்ன வாக்குறுதி அளித்தாலும், அவர் அதையே திரும்ப திரும்ப சொல்கிறார். அந்த போலி கெஜ்ரிவாலிடம் ஜாக்கிரதை என்று தெரிவித்தார்.