நம்ம வீட்ல சாப்பிட மாட்டாங்க ஆனால் பணத்தை மட்டும் எடுத்துக் கொள்வாங்க.. அவங்களுக்கு வெட்கம் இல்லை.. ஜித்தன் ராம்

 
பணம்

நம்ம வீட்ல சாப்பிட மாட்டாங்க ஆனால் பணத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம் என்று சொல்லும் பண்டிட்களுக்கு (பிராமணர்கள்) வெட்கம் இல்லை என்று பா.ஜ.க.வின் கூட்டணி கட்சி தலைவரான ஜித்தன் ராம் மாஞ்சி பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

பீகார் மாநிலம் பாட்னாவில்  கடந்த சனிக்கிழமையன்று புய்யான்-முசாஹர் சமூகத்தினர் நிகழ்ச்சி ஒன்று நடத்தினர். அந்த நிகழ்ச்சியில் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் தலைவர் ஜித்தன் ராம் மாஞ்சி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் ஜித்தன் ராம் மாஞ்சி பேசுகையில் கூறியதாவது: தற்காலத்தில் ஏழைப் பிரிவினரிடையே  மத பக்தி அதிகமாக காணப்படுகிறது.

ஜித்தன் ராம் மாஞ்சி

இறைவன் சத்னாராயனின் பெயரையோ அல்லது வழிபாட்டையோ நாங்கள் அறியவில்லை. இப்போது ஒவ்வொரு தோலாவிலும் சத்னாராயனை வணங்குகிறோம். இந்த பண்டிட்கள், உங்கள் வீட்டில் எதையும் சாப்பிட மாட்டோம் ஆனால் உங்கள் பணத்தை மட்டும் எடுக்க விரும்புகிறோம் என்று சொல்வதால் அவர்களுக்கு (பண்டிட்கள்) வெட்கம் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். ஜித்தன் ராம் மாஞ்சியின் இந்த கருத்து சர்ச்சையை கிளப்பியது.

பண்டிட்கள்

இந்நிலையில் ஜித்தன் ராம் மாஞ்சி தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:  உண்மையில் நான் என் சொந்த சமூக மக்களை ஏளனம் செய்தேன். பிராமணர் சமூகத்திற்கு எதிராக நான் எந்த இழிவான கருத்தையும் பயன்படுத்தவில்லை. என் வார்த்தைகளால் அவர்கள் புண்பட்டிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனது சக தலித்துகளுக்கு நான் ஹராமி என்ற வார்த்தையை பயன்படுத்தினேன். நான் பிராமணர்களுக்கு அந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை என்று தெரிவித்தார்.