இதை அரசியலாக்க நான் தயாராக இல்லை - ஸ்டாலின் திட்டவட்டம்

 
sக்

அதை எல்லாம் இங்கே விரிவாக பேசி அரசியலாக்க நான் தயாராக இல்லை என்று பரபரப்பை ஏற்படுத்தினார் முதல்வர் ஸ்டாலின்.

கடந்த 2016 தேர்தலில் கோவை மாவட்டத்தில் ஒரே ஒரு தொகுதியில் வென்ற தி.மு.க, இந்தமுறை அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. தமிழகம் முழுவதும் திமுக பெருவாரியான இடங்களை பெற்று வெற்றி பெற்றிருந்தாலும் கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது.  கோவை தனது கோட்டை என்று அதிமுக மீண்டும் நிரூபித்தது. 

 கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு , கோவை தெற்கு,  தொண்டாமுத்தூர்,  சிங்காநல்லூர்,  கிணத்துக்கடவு, வால்பாறை, பொள்ளாச்சி ஆகிய 10 தொகுதிகளிலும் அதிமுக வென்றது.

ச்ட்

இதனால் கொங்கு மண்டலத்தினை  பலப்படுத்த வேண்டும்.  அங்கே திமுகவின் வாக்கு வங்கியை அதிகப்படுத்த வேண்டும் என்கிற பொறுப்பினை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கி இருக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.   அவர் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வுக் கூட்டம் நடத்தி மக்களிடம் மனுக்களைப் பெற்று அது குறித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.   இந்த நிலையில் கோவையில் இன்று நடைபெற்ற விழாவிலும் இதை முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

 விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,  நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலை பொறுத்த வரைக்கும் அனைத்து மாவட்டங்களிலும் நமக்கு பெருவாரியான வெற்றி கிடைத்திருந்தாலும் இந்த கோவை மாவட்டத்தை பொறுத்தவரையில் நாம் நினைத்த அளவிற்கு வெற்றி பெற முடியவில்லை.  அதை எல்லாம் இங்கே விரிவாக பேசி அரசியலாக்க நான் தயாராக இல்லை.  காரணம்,  இது அரசு விழா.  வெற்றி வாய்ப்பை தவறவிட்ட மாவட்டமாக கோவை மாவட்டம் இருந்தாலும் கோவையில் தான் இத்தகைய  மாபெரும் மாநாடு போன்ற மக்களை சந்திக்க கூடிய நிகழ்ச்சிக்கு நான் வந்திருக்கிறேன் என்பது முக்கியம் என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

அவர் மேலும் பேசியபோது,   ஆட்சிக்கு வந்தவுடனேயே நான் சொன்னேன்.  பெரிய வெற்றியை பெற்று இருக்கிறீர்கள் உங்கள் செய்தி என்ன என்று என்னிடத்தில் செய்தியாளர்கள் கேட்டபோது நான் சொன்னேன்.  வெற்றி தந்த மக்களுக்கு என்னுடைய நன்றி.  நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்கிற உணர்வோடு ஓட்டு போட்ட அவர்களுக்கு மட்டுமல்ல எங்களை எதிர்த்து ஓட்டு போட்டு இருப்பவர்கள் ஓட்டு போடாதவர்களுக்கும் சேர்த்து பணியாற்றுவது தான் என்னுடைய வெற்றி.  அதில் உறுதியாக இருப்பேன் என்று நான் சொன்னேன்.

 எந்த வேறுபாடும் நாங்கள் பார்க்க மாட்டோம் என்று நான் சொன்னதை தான் இன்று வரையில் அல்ல,  தொடர்ந்து அப்படித்தான் கடைப்பிடிப்பேன்.  நம்முடைய ஆட்சி இருக்கின்ற வரை அப்படித்தான் கடைப்பிடிப்பேன்.  அதில் எந்த மாற்றமும் கிடையாது என்று உறுதியாகச் சொன்னார்.