கொம்புசீவும் துரைமுருகன், கூல் பண்ணும் பாலு- குழப்பத்தில் ஸ்டாலின்

 

கொம்புசீவும் துரைமுருகன், கூல் பண்ணும் பாலு- குழப்பத்தில் ஸ்டாலின்

கூட்டணி மற்றும் இடப் பங்கீடு தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்திருப்பதாக அந்த கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர். ‘’ நம்மை மதிக்காத எந்த கட்சியுடனும் கூட்டணி வேண்டாம். தனித்தே நிற்போம்’’ என பொதுச் செயலாளர் துரைமுருகன் ஒருபுறம் கொம்புசீவிக் கொண்டிருக்கிறார். மறுபுறம் பொருளாளர் பாலுவோ, ‘’ அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். அது நமக்குத்தான் ஆபத்து’’ என எச்சரிக்க, இறுதலைக்கொள்ளி எறும்பாக ஸ்டாலின் தவித்து வருவதாகக் கூறப்படுகிறது.

கொம்புசீவும் துரைமுருகன், கூல் பண்ணும் பாலு- குழப்பத்தில் ஸ்டாலின்


எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தல் கிட்டத்தட்ட எல்லா கட்சிகளுக்கும் கௌரவ பிரச்சனையாக மாறியுள்ளது. பெரிய கட்சிகளுக்கு ஆட்சியைக் கைப்பற்ற வேண்டிய அவசியம் உள்ளதென்றால் சிறிய கட்சிகளுக்கு அங்கீகாரத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த கட்சிகள் கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சியிடம் அதிக இடங்கள் ஒதுக்குமாறு வலியுறுத்தி வருகின்றன.

திமுக அணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட், ஐஜேகே, முஸ்லீம் லீக், மமக உள்ளிட்ட கட்சிகள் கோரும் இடங்களைக் கூட்டினால் திமுகவுக்கு இரட்டை இலக்க இடங்களாவது மிஞ்சுமா என்பது கேள்விக்குறியே. கூட்டணி கட்சி தலைவர்களின் தொடர் வலியுறுத்தல், திமுக நிர்வாகிகளை எரிச்சலடையச் செய்துள்ளது.

கொம்புசீவும் துரைமுருகன், கூல் பண்ணும் பாலு- குழப்பத்தில் ஸ்டாலின்

அண்மையில் அறிவாலயத்தில் நடைபெற்ற வழக்கமான ஆலோசனையின்போது துரைமுருகன் ரொம்பவே சீறியிருக்கிறார்.’’ தனித்துப் போட்டியிட்டால் டெபாசிட்டுக்குக் கூட வழியில்லாத கட்சிகளெல்லாம் நம்மை மிரட்டிப் பார்க்கின்றன. இதை அனுமதிக்கக் கூடாது. நம் வழி, தனி வழியென்று போய்க் கொண்டே இருக்க வேண்டும்’’ என கொந்தளிக்க, டி.ஆர் பாலுதான், ‘’இப்போதைக்கு அவசரப்பட வேண்டாம்’’ என கூறி சமாதானப்படுத்தியிருக்கிறார்.

கொம்புசீவும் துரைமுருகன், கூல் பண்ணும் பாலு- குழப்பத்தில் ஸ்டாலின்

இந்தமுறை ஆட்சியைக் கைப்பற்றாவிட்டால் கட்சி சுத்தமாக கலகலத்துப் போகும் என்பதை தெரிந்துவைத்துள்ள ஸ்டாலின், நடப்பு நிகழ்வுகளைக் கண்டு ரொம்பவே குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார். இது குறித்து திமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது; ‘’ ஒரு பக்கம் அதிக இடங்கள் கேட்டு மிரட்டும் கூட்டணி கட்சிகள். மறுபக்கம் ஆளாளுக்கு மாறுபட்ட கருத்தை சொல்லும் கட்சி நிர்வாகிகள்.

இவர்களுக்கு இடையில் சிக்கிக் கொண்டு ஸ்டாலின் படாத பாடு படுகிறார். இது தவிர ஐபேக் வேறு தன் பங்கிற்கு அவரை அவ்வப்போது உசுப்பேற்றிவிடுகிறது. இந்த குழப்பமான சூழலில் ஸ்டாலின் எடுக்கும் முடிவு தப்பாக இருக்கக் கூடாதே என்பதுதான் எங்களைப் போன்றவர்களின் கவலையாக உள்ளது’’ இவ்வாறு அவர் கூறினார்.