முதல்வர் ஸ்டாலினுக்கு உ.பி. எழுதிய உள்ளக்குமுறல் கடிதம்

 
sa

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த திமுக உடன்பிறப்பு எழுதியுள்ள உள்ளக்குமுறல் கடிதம், புதுக்கோட்டை மாவட்ட திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடியை சேர்ந்த சத்யமூர்த்தி, திமுக இளைஞரணி ஒன்றிய அமைப்பாளராக இருந்து வந்துள்ளார்.  தொடர்ந்து இரண்டு முறை அவர் திமுகவின் பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். 

saa

கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரைக்கும் சத்யமூர்த்தியின் மனைவி குமுதவள்ளி, ஆலங்குடியின் பேரூராட்சியின் தலைவராக இருந்திருக்கிறார்.  கட்சி கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் அனைத்திற்கு  கணக்கு பார்க்காமல் செலவு செய்து வந்ததாக அவர் தரப்பில் கூறப்படுகிறது.  

இந்த சத்யமூர்த்தி தற்போது கட்சியில் அடிப்படை உறுப்பினராகவே இருந்து வருகிறார்.  இந்த நிலையில் ஆலங்குடி பேரூராட்சி  ஓடைபாலம் அமைக்கும் டெண்டருக்காக விண்ணப்பித்திருக்கிறார். 

 கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க் கட்சியாக இருந்ததால் அரசு டெண்டர் எதுவும் கிடைக்காமல் இருந்து வந்துள்ளது .  இந்த நிலையில் தற்போது நம்ம ஆட்சி வந்திருக்கிறது என்ற நம்பிக்கையில் அந்த ஓடை பாலங்களுக்கான பணியை செய்வதாக கேட்டிருக்கிறார் சத்தியமூர்த்தி.    அதற்கு ஆலங்குடி பேரூராட்சி திமுக நகர செயலாளர்,  15% கமிஷன் கொடுத்துவிட்டு டெண்டரை  எடுத்து  செய்யச் சொல்லியிருக்கிறார்.   அவர் இப்படிச் சொன்னதும் தனது கனவில் மண்ணை வாரி போட்டது போல் ஆகியிருக்கிறது சத்தியமூர்த்திக்கு.

mu

 கட்சிக்காக இத்தனை வருஷம் கடுமையாக உழைத்த என்னிடமே கமிஷன் கேட்பதா என்று  கொதித்தெழுந்த சத்யமூர்த்தி,    கமிஷன் தொகையை குறைத்து கூட பேச அந்த திமுக நகர செயலாளர்  மறுக்கிறார் என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தனது உள்ளக் குமுறலை கொட்டித் தீர்த்திருக்கிறார் கடிதம் மூலமாக.

 அந்த கடிதத்தில் சத்தியமூர்த்தி மேலும்,   ஆலங்குடி பேரூராட்சியில் ஒப்பந்த பணிகளுக்கு நான் டெண்டர் போட்டால் 15% தனியாக லஞ்சம் கேட்கிறார் நமது கட்சியை சேர்ந்த நகரச் செயலாளர்.  மேலிடத்திற்காக   பணம் வாங்கிய பின்னரே அதை உறுதிப்படுத்த முடியும் என்று சொல்கிறார்.   எனக்கு தற்போது 67 வயது ஆகிறது.  என்னைப்போன்ற கட்சியை வளர்த்தவர்களுக்கு இந்த நிலை என்றால் திமுக எப்படி வளரும்.   இதே நிலை நீடித்தால் பேரூராட்சி தேர்தலில் திமுக பலவீனமடையும்.  இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் அதிகமாக இருந்தாலும் கூட தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவித்து இருக்கிறார்.

 சத்தியமூர்த்தி கடிதத்தால் ஆலங்குடி திமுகவினர் இடையே சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.