காங்கிரஸை கை விட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்.. மம்தா முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார்

 
கீர்த்தி ஆசாத்

காங்கிரஸ் மூத்த தலைவர் கீர்த்தி ஆசாத் நேற்று அந்த கட்சியிலிருந்து விலகி திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்.

முன்னாள் கிரிக்கெட் வீரரான கீர்த்தி ஆசாத் முதலில் பா.ஜ.க.வில் இருந்தார். 2015ல் அப்போது மத்திய நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லியை வெளிப்படையாக விமர்சனம் செய்தார். இதனையடுத்து அந்தாண்டு டிசம்பரில் பா.ஜ.க.விலிருந்து கீர்த்தி ஆசாத் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் 2019ல் காங்கிரசில் இணைந்தார். சமீபகாலமாக காங்கிரஸ் தலைமைக்கும் குறிப்பாக ராகுல் காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கீர்த்தி ஆசாத் அதிருப்பதியில் இருந்தாக  தகவல்.

மம்தா பானர்ஜி, கீர்த்தி ஆசாத்

இந்நிலையில் நேற்று யாரும் எதிர்பாராத வண்ணம் கீர்த்தி ஆசாத், மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை சந்தித்து அந்த கட்சியில் இணைந்தார். திரிணாமுல் காங்கிரசில் இணைந்த பிறகு கீர்த்தி ஆசாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், மம்தா பானர்ஜி தலைமையில், நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்று கூறுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

மோடி

இன்று அவரை போன்ற ஒரு ஆளுமை நாட்டிற்கு தேவை. அவர் நாட்டுக்கு சரியான திசையை காட்ட முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார். காங்கிரசிலிருந்து பல பிரபலங்கள் வெளியேறுவது அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மம்தா பானர்ஜி 3 நாள் பயணமாக டெல்லி வந்துள்ளார். இன்று பிரதமர் மோடியை மம்தா பானர்ஜி சந்தித்து, பி.எஸ்.எப். விவகாரம், மாநில வளர்ச்சி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச உள்ளார்.