தடுப்பூசி போட்டால் பிரிட்ஜ், வாஷிங் மெஷின், எல்.இ.டி. டிவி.. மாநகராட்சியின் அதிரடி அதிர்ஷ்ட குலுக்கல்

 
பிரிட்ஜ்

தடுப்பூசி போட்டுக கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், மகாராஷ்டிராவில் சந்திராபூர் மாநகராட்சி அதிர்ஷ்ட குலுக்கலை அறிவித்துள்ளது. முதல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலிக்கு பிரிட்ஜ் கிடைக்கும்.

நம் நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் இருக்கிறது. தொற்றுநோயான கொரோனா வைரஸூக்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசி மிகப்பெரிய ஆயுதமாக உள்ளது. நம் நாட்டில் தற்போது 110 கோடிக்கும் அதிகமான மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூர் மாநகராட்சி அந்த பகுதி மக்கள் போட்டுக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் அதிர்ஷ்ட குலுக்கலை அறிவித்துள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நபர்

சந்திராபூர் மாநகராட்சி மேயர் ராக்கி சஞ்சய் கஞ்சர்லவார் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மக்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக சந்திராபூர் மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நவம்பர் 12ம் தேதி முதல் 24ம் தேதிக்குள் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் அதிர்ஷ்ட குலுக்கலில் பங்கேற்க தகுதி பெறுவார்கள். இந்த குலுக்கலில் குளிர்சாதன பெட்டி (பிரிட்ஜ்), வாஷிங் மெஷின் மற்றும் எல்.இ.டி. தொலைக்காட்சி ஆகியவை முறையே முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகளாக வழங்கப்படும்.

டி.வி.

மேலும், 10 பேருக்கு ஆறுதல் பரிசாக மிக்சி-கிரைண்டர் வழங்கப்படும். நகரத்தில் தடுப்பூசி போட தகுதியான நபர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது. நகரத்தில் 21 மையங்களில் தடுப்பூசி போடும் வசதி செய்யப்பட்டுள்ளது என்று அந்நகர மேயர் ராக்கி தெரிவித்தார்.