இம்ரான் கான் மூத்த சகோதரர் என்ற சித்து மீது நடவடிக்கை எடுப்பீர்களா?.. ராகுல் காந்திக்கு கடிதம் எழுதிய பா.ஜ.க.

 
ராம் கதம்

இம்ரான் கான் மூத்த சகோதரர் என்ற நவ்ஜோத் சிங் சித்து மீது நடவடிக்கை எடுப்பீர்களா? என்று கேள்வி கேட்டு ராகுல் காந்திக்கு பா.ஜ.க. செய்திதொடர்பாளர் ராம் கதம் கடிதம் எழுதியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர் ராம் கதம் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: நவம்பர் 20ம் தேதி கர்தார்பூர் சாஹிப் பயணத்தின்போது உங்க கட்சியின் மூத்த தலைவரும், பஞ்சாப் காங்கிரஸ் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து, பாகிஸ்தான் பிரதமரும், பயங்கரவாதிகளின் பாதுகாவலருமான இம்ரான் கானை தனது மூத்த சகோதரர் என்று அழைத்தார்.

நவ்ஜோத் சிங் சித்து

பாகிஸ்தான் மீதான அவரது அன்பை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? மற்றும் பிரதமர் கானுக்காகவா? உங்கள் கட்சி மற்றும் உங்க கட்சி தலைவர்கள் மீது உங்களுக்கு கட்டுப்பாடு இல்லையா? இந்த சம்பவம் நடந்து 48 மணி நேரத்திற்கு மேலாகி விட்டது, ஆனால் நீங்கள் இது குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. அவருடைய அறிக்கையை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? சித்துவின் இந்த அறிக்கை குறித்து நாடு உங்களிடம் விளக்கம் கோருகிறது.

ராகுல் காந்தி

சித்து மீது நடவடிக்கை எடுத்து விளக்கம் அளிப்பீர்களா?. இவ்வாறு அதில் எழுதியுள்ளார். பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து கடந்த சனிக்கிழமையன்று பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் குருத்வாராவுக்கு சென்றார். அங்கு பாகிஸ்தான் அதிகாரி ஒருவரிடம் இம்ரான் கான் எனக்கு மூத்த சகோதரர் என்று பெருமையாக பேசினார். இது இந்தியாவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.