ஒரே ஒரு சான்ஸ் கொடுங்க.. டெல்லியை மாற்றியது போல் பஞ்சாபை மாற்றுவோம்.. பஞ்சாப் மக்களிடம் கெஜ்ரிவால் வேண்டுகோள்

 
நீங்க என்ன 100 யூனிட் கொடுக்குறது…  டெல்லியில் 200 யூனிட் வரை இலவச மின்சாரம்- கெஜ்ரிவால் அதிரடி

2022ல் நடைபெற உள்ள பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள், டெல்லியை மாற்றியது போல் பஞ்சாபை மாற்றுவோம் என்று பஞ்சாப் மக்களிடம் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்தார்.

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில் கூறியதாவது: காங்கிரசை சேர்ந்த பலர் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். ஆனால் அவர்களின் (காங்கிரஸ்) குப்பைகளை நாங்கள் எடுக்க விரும்பவில்லை. அவர்களின் குப்பைகளை நாங்கள் எடுக்க தொடங்கினால் இன்று மாலைக்குள் காங்கிரஸின் 25 எம்.எல்.ஏ.க்களும், 2 முதல் 3 எம்.பி.க்களும் எங்களிடம் இருப்பார்கள். 

காங்கிரஸ்

பஞ்சாபில் உள்ள தற்போதைய அரசு (காங்கிரஸ்), மாநிலத்தின் கருவூலம் காலியாகி விட்டது புலம்புகிறது. ஆனால் அந்த கருவூலத்தை காலி செய்தது யார்? கடந்த 15 ஆண்டுகளாக நீங்கள் (சிரோமணி அகாலி தளம், காங்கிரஸ்)   ஆட்சியில் இருக்கிறீர்கள். மாநிலத்தின் கருவூலத்தை எப்படி நிரப்புவது என்பது கெஜ்ரிவாலுக்கு தெரியும். ஆம் ஆத்மிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். டெல்லியை மாற்றிய விதத்தில் பஞ்சாபில் மாற்றத்தை கொண்டு வருவோம். இந்த தேர்தல் மிகவும் முக்கியமானது. ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். 

நவ்ஜோத் சிங் சித்து

நவ்ஜோத் சிங் சித்து முக்கியமான பிரச்சினைகளை எழுப்புகிறார், ஆனால் காங்கிரஸ் மேலிடத்தால் ஒடுக்கப்படுகிறார். அவர் கேப்டனால் (அமரீந்தர் சிங்) கூட அடக்கப்பட்டார். தற்போதைய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி பொய்யான வாக்குறுதிகளை கொடுக்கிறார். ஊழலை ஒழிப்பேன் என்று வாக்குறுதி அளித்தார். அது நடக்கவில்லை. ஒரு அமைச்சர் அனுபவிக்கும் அனைத்து இலவச வசதிகளையும் மாநிலத்தில் உள்ள சாமானியர்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் நான் உறுதியாகஉள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.