தேசிய பாதுகாப்பு விஷயத்தை அரசியலாக்காதீங்க.. பஞ்சாப் அரசை வலியுறுத்திய கேப்டன் அமரீந்தர் சிங்

 
கேப்டன் அமரீந்தர் சிங்

பஞ்சாப் சட்டப்பேரவையில் பி.எஸ்.எப். அதிகார வரம்பை அதிகரிக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை திரும்ப பெறக்கோரி தீர்மானம் நிறைவேற்றியதற்கு, தேசிய பாதுகாப்பு விஷயத்தை அரசியலாக்காதீங்க என்று அம்மாநில அரசை கேப்டன் அமரீந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் பஞ்சாப், அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில், சர்வதேச எல்லையில், எல்லை பாதுகாப்பு படையின் (பி.எஸ்.எப்.) அதிகாரங்களை அதிகரித்து உத்தரவிட்டுள்ளது. அதாவது எல்லையில் இருந்து நாட்டின் 50 கிலோ மீட்டர் தூரம் வரை சோதனைகளை நடத்தவோ, சந்தேகத்திற்குரியவர்களை கைது செய்யவோ எல்லை பாதுகாப்பு படைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் 15 கிலோ மீட்டர் தூரம் வரை மட்டுமே எல்லை பாதுகாப்பு படையின் அதிகாரம் இருந்தது.

மத்திய உள்துறை அமைச்சகம்

பி.எஸ்.எப். அதிகார வரம்பை அதிகரித்தற்கு பஞ்சாப் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் நேற்று பஞ்சாப் துணை முதல்வர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா அம்மாநில சட்டப்பேரவையில், பி.எஸ்.எப். அதிகார வரம்பை அதிகரிக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை திரும்ப பெறக்கோரி தீர்மானம் கொண்டு வந்தார்.  இதற்கு அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும் தேசிய பாதுகாப்பு விஷயத்தை அரசியலாக்காதீங்க என்று காங்கிரஸ் அரசை வலியுறுத்தியுள்ளார்.

சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா

கேப்டன் அமரீந்தர் சிங் இது தொடர்பாக கூறியதாவது: பி.எஸ்.எப். செயல்பாட்டு அதிகார வரம்பு தேசிய பாதுகாப்பை பற்றியது, மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கை பற்றியது அல்ல. பஞ்சாபில் தற்போது இருக்கும் தற்போதைய அதிகாரங்களால் (ஆட்சியில் இருப்பவர்கள்) இதை புரிந்து கொள்ளமுடியவில்லை. பஞ்சாப் மட்டுமல்ல, ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலும் சர்வதேச எல்லைக்குள் 50 கிலோ மீட்டர் தொலைவில் பி.எஸ்.எப். அதிகார வரம்பு உள்ளது. பாகிஸ்தான் 30 கிலோமீட்டர் தூரம் வரை அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் மிகவும் மேம்படுத்தப்பட்ட ட்ரோன்களை பயன்படுத்துகிறது. எனவே பி.எஸ்.எப். செயல்பாட்டு அதிகார வரம்பை அதிகரிப்பது அவசியம்.

எல்லை பாதுகாப்பு படை வீரர்கள்

சட்டம் ஒழுங்கு மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. துரதிர்ஷ்டவசமாக இந்த பிரச்சினையில் விளையாடுபவர்களால் சட்டம் ஒழுங்கு மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாட்டை கண்டுபிடிக்க முடியவில்லை. பஞ்சாப் காவல்துறை போன்றதுதான் பி.எஸ்.எப். நமது சொந்த படை, நம் நிலத்தை ஆக்கிரமிக்க எந்த வெளி அல்லது வெளிநாட்டு சக்தியும் வரவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.