பதவியிலிருந்து விலகுறோம்... சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 3 ராஜஸ்தான் அமைச்சர்கள்

 
ராஜஸ்தான் அமைச்சர்கள்

ராஜஸ்தானில் அமைச்சரவை அமைச்சர்கள் 3 பேர் தங்கள் பதவியிலிருந்து விலக விரும்புவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், அந்த கட்சியின் பிரபலமான இளம் தலைவருமான சச்சின் பைலட்டுக்கும் இடையே பனிப்போர் நடைபெற்று வருகிறது. இதனால் கடந்த ஒராண்டு மேலாக ராஜஸ்தான் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று குரல்கள் ஒலித்து வந்தன.

சோனியா காந்தி

இந்த சூழ்நிலையில் இன்னும் சில தினங்களில் ராஜஸ்தான் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று தகவல் வெளியானது. இந்நிலையில், அம்மாநில அமைச்சரவை அமைச்சர்கள் 3 பேர் தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய விரும்புவதாக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். இது தொடர்பாக ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளர் அஜய் மாக்கன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அஜய் மாக்கன்

ராஜஸ்தான் அமைச்சரவையின் மூன்று அமைச்சர்களான கோவிந்த் சிங் தோதாஸ்ரா (கல்வித்துறை), ரகு சர்மா (மருந்து மற்றும் சுகாதாரத்துறை)) மற்றும் ஹரிஷ் சவுத்ரி (வருவாய் துறை) ஆகியோர் தங்கள் பதவிகளில் இருந்து விலகி கட்சி அமைப்பில் பணியாற்ற விருப்பம் தெரிவித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். இவ்வாறு அவர் தெரிவித்தார். அமைச்சரவையை விரிவாக்கம் செய்வதற்கு வசதியாக இவர்கள் பதவியை துறக்க முடிவு செய்ததாக தகவல்.