ஜம்மு அண்டு காஷ்மீர் காங்கிரஸில் கலகம்... கட்சி பதவியை உதறிய குலாம் நபி ஆசாத் ஆதரவாளர்கள் 20 பேர்

 
காங்கிரஸ்

ஜம்மு அண்டு காஷ்மீர் காங்கிரஸில் கட்சி தலைமையை மாற்றக்கோரி குலாம் நபி ஆசாத் ஆதரவாளர்கள் 20 பேர் தங்களது கட்சி பதவியை ராஜினாமா செய்ததாக தகவல்.

நாட்டின் மிகப்பெரிய பாரம்பரியம் கொண்ட கட்சி காங்கிரஸ். சுதந்திரம் அடைந்தது முதல் நாட்டை நீண்டகாலமாக ஆடசி செய்த கட்சியான  காங்கிரஸின் நிலைமை தற்போது மிகவும் பரிதாபமாக உள்ளது.  காங்கிரஸின் உட்கட்சி பூசல், கருத்து வேறுபாடு காரணமாக தலைவர்கள் வெளியேற்றம்  போன்ற காரணங்களால் காங்கிரஸ் கட்சி தேய்பிறை நிலவு போல் தேய்ந்து வருகிறது. பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்குள் நிலவிய  உட்கட்சி பூசலை கட்சி தலைமை ஒரு மாதிரி முடிவுக்கு கொண்டு வந்த நிலையில், ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன் பிரதேச காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம் வெடித்துள்ளது. 

குலாம் அகமது மிர்

ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன் பிரதேச காங்கிரஸ் தலைவராக குலாம் அகமது மிர் உள்ளார். தற்போது இவரை மாற்றக்கோரி பல தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். குலாம் அகமது மிர்ரை தலைவர் பதவியிலிருந்து நீக்கக்கோரி, சுமார் மூத்த தலைவர்கள் 20 பேர் தங்களது கட்சி  பொறுப்பை ராஜினாமா செய்துள்ளனர். ராஜினாமா செய்த காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் குலாம் நபி ஆசாத் ஆதரவாளர்கள். கட்சி பதவியை ராஜினாமா செய்தவர்களில்  முன்னாள் அமைச்சர்கள் ஜி.எம். சுரூரி, விகார் ரசூல் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மனோகர் லால் சர்மா, குலாம் நபி மோங்கோ உள்ளிட்டவர்கள் அடங்குவர்.  

விகார் ரசூல்

இது தொடர்பாக மூத்த தலைவர்கள் கூறுகையில், காங்கிரஸ் தலைவர் 3 ஆண்டு காலத்துக்கு நியமிக்கப்படுகிறார் என்று எங்களிடம் கூறப்பட்டது. ஆனால் இப்போது 7 ஆண்டுகள் ஆகி விட்டது. இருப்பினும், ஜம்மு அண்டு காஷ்மீரில் கட்சி தலைமை மாற்றம்  செய்யப்படவில்லை என்றால் நாங்கள் எந்த கட்சி பதவியையும் வகிக்க மாட்டோம் என்று நாங்கள் தலைமையிடம் கூறியுள்ளோம் என்று 20 நாட்களுக்கு முன்பு கடிதம் எழுதியுள்ளோம் என்று தெரிவித்தனர். ஜம்மு அண்டு காஷ்மீர் காங்கிரஸில் மூத்த தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து இருப்பது அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.