‘பாமக-வை கூட்டணியில் சேர்த்தால் நமக்குதான் ஆபத்து!’ – அமித்ஷாவுக்கு தமிழிசை அறிக்கை

 

‘பாமக-வை கூட்டணியில் சேர்த்தால் நமக்குதான் ஆபத்து!’ – அமித்ஷாவுக்கு தமிழிசை அறிக்கை

நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவிடம் அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவிடம் அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்தாண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அதேசமயம், அடுத்த தேர்தலிலும் நிச்சயம் வென்றாக வேண்டும் என்ற மும்முரத்துடன் பாஜகவும் களத்தில் இறங்கி பணியாற்ற துவங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, அனைத்து மாநில தலைவர்களிடமும் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு பாஜக தேசிய செயலாளர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.

அந்த வகையில், தமிழகத்தில் பாஜகவிற்கு இருக்கும் செல்வாக்கு மற்றும் யாருடன் கூட்டணி அமைத்தால், கவுரமான முறையில் தேர்தலை சந்திக்க முடியும் என்று அமித் ஷாவிற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விரிவான அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

amit shah

அதில், “பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரையில், கடந்த முறை அவர்களுக்கு எட்டு இடங்களைக் (நாடாளுமன்றத் தேர்தல்) கொடுத்தோம். அவர்களால் நம்முடைய வாக்கு வங்கியில் எந்தவித லாபமும் வந்து சேரவில்லை. `மோடி பிரதமர்’ என்ற முழக்கத்தால் தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார் அன்புமணி. அவர்களுக்குச் செல்வாக்கு இருக்கக் கூடிய ஆறு தொகுதிகளையும் அவர்களே எடுத்துக்கொண்டார்கள். அதனால் நம்முடைய வாக்கு வங்கி எந்தவகையிலும் உயரவில்லை. இதனால்தான், `பா.ம.க-வுடன் கூட்டணி வேண்டாம்’ என சட்டமன்றத் தேர்தலின்போதே நான் அறிக்கை கொடுத்தேன். நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும், `மூன்று எம்.பி-க்கள் இருந்தால் ஓர் அமைச்சர் பதவி’ எனக் கூறினோம். அவர்கள் ஒரு எம்.பி பதவியை வைத்துக்கொண்டு அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டார்கள். பா.ம.கவின் ஆசை அதிகமாக இருந்ததால், அவர்களது திட்டத்துக்குத் தலைமை செவிசாய்க்கவில்லை.

தமிழ்நாட்டில் கட்சியை வளர்க்கும் திட்டத்தோடு நாம் செயல்பட்டு வருகிறோம். கடந்த நான்கு வருடங்களாக பா.ஜ.க-வுக்கு எதிரான அரசியலையே ராமதாஸ் பேசி வருகிறார். அவரால் பாதிக்கப்பட்ட வன்னிய சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ-க்களும் அக்கட்சியின் நிர்வாகிகளும் நம்பக்கம் வந்திருக்கிறார்கள். இதன்மூலமாக, வன்னியர்கள் மத்தியிலும் பா.ஜ.க வளர்ந்து வருகிறது. தமிழ் குழுக்களோடு சேர்ந்துகொண்டு மதச்சார்பற்ற வாக்குகளுக்காக ராமதாஸ் அரசியல் செய்து வருகிறார். நம்மைப் பற்றிப் பேசிய ராமதாஸும், ` காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் வைப்பேனே தவிர, பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்க மாட்டேன்’ எனக் கூறிவிட்டார். இப்படிப்பட்ட சூழலில், பா.ம.க-வோடு நாம் கூட்டணி வைத்தால், அது சுமுகமான கூட்டணியாக இருக்கும் எனக் கூற முடியாது. பா.ம.க-வின் பலத்துக்கு ஏற்ப அவர்களை நாம் அணுக வேண்டும். 

anbumani ramadoss

எனவே, பா.ம.க விஷயத்தில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தே.மு.தி.க-வுக்கு எதிராக பா.ம.க செயல்பட்டது. அதனால்தான் கூடுதலாக மூன்று இடங்களை நம்மால் பெற முடியவில்லை. `கூட்டணிக்குள் வருவோம்’ என அவர்கள் கூறுவதையும் நம்ப முடியாது. பா.ம.க-வுடனான கூட்டணி எந்தளவுக்குப் பயன்படும் என்பதை தேர்தல் நேரத்தில் அலசி ஆராய்ந்து முடிவெடுப்போம்.” என விரிவாக விளக்கியுள்ளார் தமிழிசை.

இந்த அறிக்கையை படித்துவிட்டு அமித் ஷா எடுக்கும் முடிவில் தான் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் எந்தெந்த கட்சிகளை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக முயற்சி செய்யும் என்பது தெரிய வரும்.