பெட்ரோல், டீசலை ரெடியா வைச்சுகோங்க… சொன்ன உடனே எல்லாத்தையும் கொளுத்துங்க… வெளியான காங்கிரஸ் தலைவரின் பேச்சு

 

பெட்ரோல், டீசலை ரெடியா வைச்சுகோங்க… சொன்ன உடனே எல்லாத்தையும் கொளுத்துங்க… வெளியான காங்கிரஸ் தலைவரின் பேச்சு

பெட்ரோல், டீசலை ரெடியா வைச்சுகோங்க உத்தரவு வந்தவுடன் எல்லாத்தையும் கொளுத்துங்க என ஒடிசா காங்கிரஸ் தலைவர் பிரதீப் மாஜி பேசும் காட்சி வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியள்ளது.

ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டத்தில் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை  என தெரிகிறது. இதனையடுத்து போலீஸ் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து எதிர்கட்சியான காங்கிரஸ் நேற்று நபரங்பூரில் 12 மணி நேர அடைப்புக்கு அழைப்பு விடுத்தது.

12 மணி நேர ஸ்டிரைக்

இந்த 12 மணி நேர அடைப்பின் போது காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரதீப் மாஜி  தொண்டர்களுக்கு தொலைப்பேசியில் உத்தரவு பிறப்பித்து  கொண்டு  இருப்பதை செய்தி நிறுவனம் ஒன்று படம் பிடித்தது. அந்த வீடியோ தொலைக்காட்சியில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், பெட்ரோல், டீசலை ரெடியா வைத்திருங்க உத்தரவு வந்தவுடன் எல்லாத்தையும் கொளுத்தி விட வேண்டும் என பிரதீப் மாஜி சொல்வது தெளிவாக தெரிகிறது.

பிரதீப் மாஜி

இது தொடர்பாக பிரதீப் மாஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், இதற்கு மேலும் அமைதியாக இருக்க முடியாது. முதலில் குண்டலியில் சிறுமியை ஜவான்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர். தற்போது  மற்றொரு சிறுமி நபரங்பூரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். தொண்டர்களுக்கு அது போன்ற உத்தரவு பிறப்பித்ததில் எனக்கு எந்த  வருத்தமும் இல்லை. சட்டத்தை கையில் எடுக்க அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.