சிபிஐ வழக்கு குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? முதலமைச்சருக்கு ஆ.ராசா கேள்வி

 

சிபிஐ வழக்கு குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? முதலமைச்சருக்கு ஆ.ராசா கேள்வி

முதலமைச்சர் மீதான டெண்டர் முறைகேடு வழக்கு சிபிஐ வசம் மாற்றப்பட்டுள்ளதால் அவர் பதவி விலக வேண்டும் என ஆ.ராசா கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை: முதலமைச்சர் மீதான டெண்டர் முறைகேடு வழக்கு சிபிஐ வசம் மாற்றப்பட்டுள்ளதால் அவர் பதவி விலக வேண்டும் என ஆ.ராசா கோரிக்கை விடுத்துள்ளார். 

தமிழக அரசின் பொதுப் பணித்துறையின் கீழ் வழங்கப்பட்டுள்ள டெண்டர்களில் முறைகேடு நடந்திருப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிபிஐ விசாரித்து முகாந்திரம் இருந்தால் முதலமைச்சர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யலாம் என தெரிவித்திருந்தது.

முதலமைச்சர் மீதான முறைகேடு வழக்கில், நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு வழங்கிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, “வலுவான ஆதாரம் இருந்ததால் தான் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. முதலமைச்சர் முறைகேடு செய்யவில்லை என்றால் நேருக்கு நேர் விவாதம் செய்ய தயாரா? தைரியம் இருந்தால் தான் முறைகேடு செய்யவில்லை என முதலமைச்சர் நிரூபிக்கட்டும். என் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்த போது நான் பதவி விலகினேன். தற்போது நிரபராதி என நிரூபித்துவிட்டேன். அதேபோல், முதல்வரும் பதவி விலகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்” என தன் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.