`என் கணவர் பெண் காவலருடன் குடும்பம் நடத்துகிறார்; என்னோடு சேர்த்து வையுங்கள்!’-திருச்சி டிஐஜியிடம் போலீஸ்காரர் மனைவி கண்ணீர்

 

`என் கணவர் பெண் காவலருடன் குடும்பம் நடத்துகிறார்; என்னோடு சேர்த்து வையுங்கள்!’-திருச்சி டிஐஜியிடம் போலீஸ்காரர் மனைவி கண்ணீர்

“எனது கணவர் இன்னொரு பெண் காவலரை திருமணம் செய்து கொண்டு வாழ்கிறார். அவரை என்னோடு சேர்த்து வையுங்கள்” என்று திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனி விஜயாவை சந்தித்து கண்ணீர் விட்டுள்ளார் போலீஸ்காரரின் மனைவி.

திருச்சி, காட்டூர் காவிரி நகரைச் சேர்ந்தவர் அருண் பிரபு. இவர், நீலகிரி மாவட்டம் குன்னூரில் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கோகிலா .இவர்களுக்கு, பிலோமின் பிரபு, டேனியல் பிரபு என்ற மகன்கள் இருக்கின்றனர்.

இதனிடையே, திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனி விஜயாவிடம் கோகிலா தனது இரண்டு மகன்களுடன் சென்று கண்ணீருடன் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், “எனது கணவர் அருண் பிரபு ஏற்கெனவே திருச்சி மாநகர ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வந்தார். 5 ஆண்டுகளாக திருச்சி மாநகர போலீசில் பணியாற்றும் திருமணமான பெண் காவலருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை 2வது திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து 2015 ஆம் ஆண்டு மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தேன். அந்த பெண் காவலரின் கணவரும் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து எனது கணவரை குன்னூருக்கும், பெண் காவலரை தூத்துக்குடிக்கும் இடமாற்றம் செய்தனர். ஆனாலும் அவர்கள் இருவரும் விடுமுறை தினத்தன்று திருச்சி சிந்தாமணியில் உள்ள பெண் காவலரின் வீட்டுக்கும் வந்து இருவரும் குடும்பம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக கோட்டை மகளிர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, இருவரையும் வீட்டில் கையும் களவுமாக காவல்துறையினர் பிடித்து எச்சரித்து அனுப்பினர்.

இந்தநிலையில் கடந்த 18ம் தேதி குன்னூரில் இருந்து விடுமுறையில் வந்த எனது கணவர் என்னையும் எனது இரண்டு குழந்தைகளையும் அடித்து துன்புறுத்தி விட்டு வீட்டைவிட்டே வெளியேற்றிவிட்டார். முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது இரண்டாவது திருமணம் செய்து சட்டப்படி குற்றம். எனவே என் கணவர் மீதும், பெண் காவலர் மீதும் நடவடிக்கை எடுத்து அவரை என்னோடு வாழ வைக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.