கார் திருடனை துரத்தி பிடித்த முதல்நிலை காவலர்… தஞ்சை எஸ்.பி. பாராட்டு!

 

கார் திருடனை துரத்தி பிடித்த முதல்நிலை காவலர்… தஞ்சை எஸ்.பி. பாராட்டு!

தஞ்சை

பட்டுக்கோட்டையில் கார் திருடனை துரத்திச்சென்று பிடித்தபோது காயமடைந்த முதல் நிலை காவலருக்கு, தஞ்சை எஸ்.பி., ரவளி பிரியா பாராட்டு தெரிவித்துள்ளார்.

மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்தவர் வேலுபாண்டி, இவரது நண்பர் வெங்கடேஷ். இவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு செய்யாறில் இருந்து மதுரைக்கு செல்வதாக கூறி கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளனர். கார் செய்யாறு பகுதியை கடந்த நிலையில், ஓட்டுநரை கத்திமுனையில் மிரட்டி பணம், நகை மற்றும் காரை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்து கார் ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில் தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு, காரை திருடிய நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

கார் திருடனை துரத்தி பிடித்த முதல்நிலை காவலர்… தஞ்சை எஸ்.பி. பாராட்டு!

இந்த நிலையில், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரியும் பிரதாப் என்பவர், நேற்று பிற்பகுதியில் மணிக்கூண்டு பகுதியில் சென்றபோது, திருட்டு போன கார் அந்த பகுதியில் சென்றுள்ளது. இதனை கண்ட அவர் காரை துரத்திச் சென்று மறித்தார். அப்போது, போலீசாரை கண்டதும் வேலுபாண்டியும், வெங்கடேஷும் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். அவர்களில் வேலுபாண்டியை துரத்திச்சென்ற காவலர் பிரதாப், அவரை மடக்கிப்பிடித்தார். அப்போது, சாலையில் விழுந்ததில் அவரது கையில் காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, போலீசார் வேலுபாண்டியை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, வேலுபாண்டியிடம் இருந்து கடத்தப்பட்ட கார், ரூ.8 ஆயிரம் பணம், ஒரு வெள்ளிச்செயின் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தப்பியோடிய வெங்கடேஷை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த காவலர் பிரதாப் பட்டுகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கொள்ளையனை தீரமாக துரத்திப்பிடித்த முதல் நிலை காவலர் பிரதாப்-க்கு தஞ்சை மாவட்ட எஸ்.பி ரவளி பிரியா பாராட்டு தெரிவித்துள்ளார்.