அதிமுக கூட்டணிக்கு சாதகம்; வெற்றியை நெருங்கிவிட்டோம் : ராமதாஸ் உற்சாகம்!!

 

அதிமுக கூட்டணிக்கு சாதகம்; வெற்றியை நெருங்கிவிட்டோம் : ராமதாஸ் உற்சாகம்!!

தமிழ்நாட்டின் தேர்தல் களம் அதிமுக மற்றும் பா.ம.க. கூட்டணிக்கு சாதகமாக உள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மனம் முழுவதும் மகிழ்ச்சியுடனும், பெருமிதத்துடனும் எழுதுகிறேன். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் எத்தகைய வெற்றியை அடைய வேண்டும் என்று நினைத்தோமோ… அந்த வெற்றி உறுதியாகி விட்டது என்பது தான் எனது மகிழ்ச்சிக்கு காரணம். நாம் பெற நினைத்த வெற்றியை கடுமையான உழைப்பின் மூலம் சாத்தியமாக்கியிருக்கிற உங்களை நினைத்து தான் நான் பெருமிதப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

தேர்தல் என்பதும் போர்க்களத்திற்கு ஒப்பானது தான். போர்க்களத்தில் மன்னர்கள் பெறும் வெற்றியும், தோல்விகளும் அவர்கள் மீது மட்டும் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. மாறாக அந்த நாட்டு மக்களின் வாழ்விலும் தான் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தேர்தல்களிலும் அதே நிலை தான். மக்கள் நலனுக்காக பாடுபடும் கட்சிகள் வெற்றி பெறும் போது அந்த மாநில மக்களுக்கு நன்மைகள் விளைகின்றன. மாறாக, மக்கள் நலனை அடகு வைத்து விட்டு, சொந்த நலனுக்காகவும், குடும்ப நலனுக்காகவும் அரசியல் செய்யும் கட்சிகள் வெற்றி பெறும் போது, அதுவே வாக்களித்த மக்களுக்கு பெரும் சாபமாகி விடுகிறது.

அதிமுக கூட்டணிக்கு சாதகம்; வெற்றியை நெருங்கிவிட்டோம் : ராமதாஸ் உற்சாகம்!!

இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான், தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நீடிக்க வேண்டும் என்பதற்காக அதிமுகவுடன் பாட்டாளி மக்கள் கட்சி சமூகநீதிக் கூட்டணி அமைத்தது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் வாழ்வாதாரங்களை பெருக்குவதற்குமான அற்புதமான திட்டங்களை தேர்தல் அறிக்கையாக வடித்தது. அதிமுகவும் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியத் தேவைகளை வழங்குவதற்கான அமுதசுரபியை தேர்தல் அறிக்கையாக வடித்து வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாட்டை இப்போது இருப்பதை விட கூடுதல் உயர்த்திற்கு வளர்த்தெடுப்பதற்கான திட்டம் அதிமுகவிடமும், பாட்டாளி மக்கள் கட்சியிடமும் இருப்பதை இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் கட்டியம் கூறுகின்றன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கடந்த 19-ஆம் தேதி பரப்புரையைத் தொடங்கிய நான், இது வரை 50க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டிருக்கிறேன். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் நேற்று நான் பரப்புரை மேற்கொண்ட போது மாநாட்டிற்கு இணையாக மக்கள் திரண்டு வந்தனர். நம் மீது மக்கள் எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதற்கு இதுவே சாட்சி. இதுவே வெற்றிக்கு அடித்தளமாகும்.

அதிமுக கூட்டணிக்கு சாதகம்; வெற்றியை நெருங்கிவிட்டோம் : ராமதாஸ் உற்சாகம்!!

தேர்தல் பரப்புரைக்காக நான் சென்ற அனைத்து தொகுதிகளிலும் மக்களின் முகங்களில் மகிழ்ச்சியையும், மலர்ச்சியையும் பார்க்க முடிகிறது. ‘‘நாங்கள் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறோம்; நில அபகரிப்பு, பெண்கள் மீதான சீண்டல் உள்ளிட்ட எந்த அச்சுறுத்தலும் இல்லை; ஒவ்வொரு நாளையும் அமைதியாகவும், நிம்மதியாகவும் கழித்துக் கொண்டிருக்கிறோம். இதே நிம்மதியும், மகிழ்ச்சியும் நீடிக்க வேண்டும் என்றால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இப்போது இருக்கும் ஆட்சியே அடுத்த ஐந்தாண்டுகளுக்கும் நீடிக்க வேண்டும்’’ என்பது தான் மக்களின் மனநிலையாக இருக்கிறது. அதிமுக தலைமையிலான அணி 200&க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும் என்பதற்கு இதுவே ஆதாரமாகும்.

10 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பை நெருங்க முடியாமல் விரக்தியின் விளிம்புக்கே சென்று விட்ட எதிர்க்கட்சிகள், எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதற்கு உதாரணமாக ஏதேதோ சதிகளை அரங்கேற்றுகின்றனர்; பொய்களை அருவியாக கட்டவிழ்த்து விடுகின்றனர். 40 ஆண்டுகளாக போராடிப் பெற்ற வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டை ஆதரிக்கவோ, வரவேற்கவோ மனமில்லாத, சட்டப்பேரவையில் வன்னியர் இட ஒதுக்கீட்டு மசோதா வாக்கெடுப்புக்கு வந்த போது, அதில் பங்கேற்காமல் ஒட்டுமொத்தமாக புறக்கணித்த மு.க.ஸ்டாலின், தென் தமிழகத்திற்கு சென்று வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது நாடகம் என்றும், அதனால் சீர் மரபினர் பாதிக்கப்பட்டு இருப்பதால் இட ஒதுக்கீட்டு சட்டத்தை ரத்து செய்யப் போவதாகவும் பேசி இருக்கிறார். இதை விட பச்சை சந்தர்ப்பவாதம் எதுவும் இருக்க முடியாது. இடத்துக்கு இடம் நிறத்தை மாற்றிக் கொள்ளும் இனத்திற்கு பெயர் அரசியல் தலைவர் அல்ல… பச்சோந்தி. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்ப்பதாகவும், அதை ரத்து செய்யப்போவதாகவும் வட தமிழகத்தில் கூறும் துணிச்சல் மு.க.ஸ்டாலினுக்கு உண்டா? ஆட்சியைப் பிடிப்பதற்காக எந்த அளவுக்கும் கீழே இறங்கும் திமுகவின் சந்தர்ப்பவாதத்தை மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்; திமுகவுக்கு பாடம் கற்பிப்பார்கள்.

அதிமுக கூட்டணிக்கு சாதகம்; வெற்றியை நெருங்கிவிட்டோம் : ராமதாஸ் உற்சாகம்!!

தமிழ்நாட்டின் தேர்தல் களம் அதிமுக & பா.ம.க. கூட்டணிக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. மக்களின் ஆதரவு நன்றாக விளைந்திருக்கிறது. அதை பக்குவமாக அறுவடை செய்ய வேண்டியது மட்டும் தான் நமது பணியாகும். அதற்காகத் தான் தேர்தல் தேதியும், கூட்டணி தொகுதி உடன்பாடும் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அதிமுக, பா.ம.க., பாரதிய ஜனதா, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி, புரட்சி பாரதம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவற்றின் நிர்வாகிகளும், தொண்டர்களும் அயராது உழைத்து வருகின்றனர். கூட்டணி கட்சியினரின் உழைப்பும், பொறுப்பும் மன நிறைவும், பெருமிதமும் அளிக்கின்றன.

கள நிலைமையை மதிப்பீடு செய்து நாம் களிப்பில் இருக்கிறோம். நமது எதிரிகள் கணிப்புகளை நம்பி கனவில் மிதந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கனவில் மிதந்து கொண்டே இருக்கட்டும். நாம் களத்தில் உழைத்துக் கொண்டே இருப்போம். களம் நமக்கு சாதகமாக இருக்கிறது என்பதற்காக நாம் சற்றும் அயர்ந்து விடக் கூடாது. அதிமுக, பா.ம.க. ஆகிய கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் உள்ள முக்கிய அம்சங்களை மக்களின் கவனத்திற்கு கொண்டு சென்று சேருங்கள். இதுவரை வாக்காளர்களை 10 முறை சென்று வாக்கு சேகரித்திருந்தாலும், இனி மீதமுள்ள நாட்களில் இன்னும் குறைந்தது 5 முறையாவது வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்ட வேண்டும். வேட்பாளர்கள் தொகுதி முழுவதும் செல்ல வேண்டும் என்பதால் அவர்களால் ஒரு முறைக்கு மேல் வர இயலாது. அதனால், அதிமுக கூட்டணிக் கட்சியினர் ஒவ்வொருவரும் தாங்கள் தான் வேட்பாளர் என்று நினைத்துக் கொண்டு மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டும். வெற்றி அறிவிப்பு வரும் வரை நாம் ஒரு நிமிடம் கூட ஓயக் கூடாது.

அடுத்த 5 நாட்களுக்கு நாம் வழங்கவிருக்கும் உழைப்பும், அதன்பிறகு வாக்கு எண்ணிக்கை வரை நாம் மேற்கொள்ளவிருக்கும் கண்காணிப்பும் தான் 234 தொகுதிகளிலும் நமக்கு வெற்றியைத் தேடித் தரப்போகின்றன. எனவே, தமிழ்நாடு தவறானவர்களின் கைகளில் சிக்கி விடாமல் தடுக்க கடுமையாக உழைப்போம்; மே 2ஆம் தேதி வெற்றிக்கனியை பறிப்போம். வெற்றி நமதே” என்று குறிப்பிட்டுள்ளார்.