பொதுச்சேவை பெறும் உரிமை சட்டத்தைஅரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்!

 

பொதுச்சேவை பெறும் உரிமை சட்டத்தைஅரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்!

பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உயர்கல்வி மாணவர் சேர்க்கை தீவிரமடைந்துள்ள நிலையில், அதற்குத் தேவையான சான்றிதழ்களை பெறுவதில் தாமதமும், இடையூறுகளும் ஏற்படுவதாக மாணவர்கள் தரப்பில் எழுந்துள்ள செய்திகள் வருத்தமளிக்கின்றன. அரசின் சேவைகள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உரிய காலத்தில் சென்றடைவதை சட்டப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டிய தருணம் வந்து விட்டதையே இது காட்டுகிறது.

பொதுச்சேவை பெறும் உரிமை சட்டத்தைஅரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்!

மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படையே மக்களே இறுதி எஜமானர்கள் என்பது தான். மக்களுக்குத் தேவையான அரசின் சேவைகள் இடையூறு இன்றியும், இடைத்தரகர்கள் இன்றியும் விரைவாகக் கிடைக்கச் செய்வதை உறுதி செய்வது தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முதல் கடமையாகும். தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாகவும், பொதுச்சேவை மையங்கள் திறக்கப்பட்டிருப்பதாலும் அரசின் சேவைகளை அணுகுவது சற்று எளிதாகியுள்ளது உண்மை. ஆனால், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றுகளுக்கு விண்ணப்பிப்பதற்கு தான் தொழில்நுட்ப வளர்ச்சி வகை செய்திருக்கிறதே தவிர, இடைத்தரகர் இல்லாமலோ, கையூட்டு கொடுக்காமலோ அவற்றைப் பெற வகை செய்யவில்லை.

பொதுச்சேவை பெறும் உரிமை சட்டத்தைஅரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்!

தமிழ்நாட்டில் அண்மையில் தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய கணக்கெடுப்பில், அரசின் சேவைகளைப் பெற கையூட்டு வழங்க வேண்டியிருப்பதாக 93 விழுக்காட்டினரும், அரசின் சேவைகளை பெறுவதில் ஏற்பட்ட அனுபவம் மனநிறைவளிக்கும் வகையில் இல்லை என்று 82 விழுக்காட்டினரும் தெரிவித்துள்ளனர். அரசின் சேவைகளைப் பெறுவதற்கான நடைமுறைகளை எளிதாக்க முடிந்த தகவல் தொழில்நுட்பத்தால், இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியவில்லை. தொழில்நுட்பத்தால் தீர்க்க முடியாத இந்த சிக்கல்களை பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம் தீர்க்கும் என்பதே பா.ம.க.வின் நிலைப்பாடாகும்.

பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம் தமிழ்நாட்டிற்கு கட்டாயம் தேவை என்பதை உயர்நீதிமன்றமும் வலியுறுத்தியிருக்கிறது. இது தொடர்பான வழக்கு ஒன்றில் சில ஆண்டுகளுக்கு முன் கருத்து தெரிவித்த மூத்த நீதிபதி ஒருவர், தமிழ்நாட்டில் பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டிருந்தால் அரசு அலுவலகங்களில் ஊழல்கள் கணிசமாக குறைந்திருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டால் அரசு அலுவலகங்களில் ஊழல்களை களைய முடியும் என்பதை சென்னை உயர்நீதிமன்றம் மட்டுமின்றி, தூய்மையான நிர்வாகத்தை விரும்பும் அனைவரும் ஏற்பார்கள்.

பொதுச்சேவை பெறும் உரிமை சட்டத்தைஅரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்!

அரசு அலுவலகங்களில் ஊழலும், மெத்தனமும் ஒழிக்கப்பட்டால் அது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் உத்வேகத்தை அளிக்கும். அதனால் தான் பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. இந்த நிலைப்பாட்டில் தமிழ்நாட்டின் தற்போதைய அரசுக்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை. இன்னும் கேட்டால் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு சட்டப்பேரவையில் ஆளுனர் நிகழ்த்திய உரையில், தமிழ்நாட்டில் சேவை பெறும் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டு சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடர் நிறைவடையவிருக்கும் நிலையில், பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கையும், வலியுறுத்தலும் ஆகும். சாதிச்சான்றிதழ் பிறப்புச் சான்று, இறப்புச் சான்று, திருமண பதிவுச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, நில ஆவணங்களின் நகல்கள் உள்பட பல்வேறு சேவைகள் மக்களுக்கு வழங்கப்படுவதற்கான காலக்கெடு பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டத்தில் நிர்ணயிக்கப்பட வேண்டும். குறித்த காலத்தில் சேவை கிடைக்காத மக்களுக்கு ரூ.10,000 வரை இழப்பீடு வழங்கவும் வகை செய்யப்பட வேண்டும்.

அரசு நிர்வாகத்தில் தூய்மையை ஏற்படுத்துவதற்கான அருமருந்தாகக் கருதப்படும் பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் மக்களுக்கு அரசின் சேவைகள் எந்தத் தடையும் இன்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.