வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்படுகிறதா?- பிரதமர் மோடி விளக்கம்

 

வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்படுகிறதா?- பிரதமர் மோடி விளக்கம்

காங்கிரஸ் பிளவுப்பட்ட குழப்பமான கட்சி என பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி எல்லைகளில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த விவகாரம் பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. பாராளுமன்ற இரு அவைகளிலும் இதுபற்றி விவாதிக்கப்பட்டது. விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக சில காங்கிரஸ் எம்பிக்கள் குரல் கொடுத்ததுடன் வெளிநடப்பிலும் ஈடுபட்டனர். அப்போது குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்த பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.

வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்படுகிறதா?- பிரதமர் மோடி விளக்கம்

இதனிடையே பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் கட்சியால் சொந்த நலனுக்காகவும் பணியாற்ற முடியாது. தேசத்தின் நலனுக்காகவும் பணியாற்ற முடியாது. மக்கள் உண்மையை அறிவதை காங்கிரஸ் கட்சியால் ஜீரணிக்க முடியவில்லை, அதனால் வெளிநடப்பு செய்துவிட்டார்கள். வேளாண் சட்டத்தில் உள்ள அனைத்து அம்சங்கள் தொடர்பாக விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. அதில் திருத்தங்கள் செய்வதற்கும் அரசு தயாராக உள்ளது. டெல்லி போராடும் விவசாய சகோதரர்கள் வதந்திகளால் தவறாக வழி நடத்தப்படுகின்றனர் வேளாண் சட்டங்கள் குறித்து அவர்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். வேளாண் சாட்டங்கள் கருப்பு சட்டங்கள் என்று பெரும்பாலான தலைவர்கள் கூறுகின்றனர். அதற்கு பதிலாக வேளாண் சட்டத்திலுள்ள உட்பொருள் குறித்து பேசி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்” எனக் கூறினார்.