தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பிரதமரும் பாஜக தலைவருமான நரேந்திர மோடி இம்மாதத்திலேயே இரண்டாம் முறையாக தமிழகத்திற்கு வந்திருக்கிறார். இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவர்,ஹெலிகாப்டரில் புதுச்சேரிக்கு சென்றார். அங்கு அரசு விழாவிலும், பாஜக பொதுக்கூட்டத்திலும் பங்கேற்ற பிறகு அவர் தற்போது கோவையில் உள்ள கொடிசியா அரங்கில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்றிருக்கிறார்.

அந்த நிகழ்ச்சியில் ஆளுநர், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். அதில், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைக்கவிருக்கும் மோடி, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அரங்கிற்கு வருகை தந்த மோடிக்கு நினைவுப் பரிசை முதல்வர் ஈபிஎஸ்சும் துணை முதல்வர் ஓபிஎஸ்சும் வழக்கினார்கள். பின்னர், மேடையில் வைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கடந்த 14ம் தேதி சென்னை வந்திருந்த மோடி, அரசு விழாவில் பங்கேற்றமையால் தேர்தல் குறித்து ஏதும் பேசாமல் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் கரங்களை பிடித்து உயர்த்தி, ஆட்சி நமதே என்பது போல குறிப்பால் உணர்த்தி விட்டுச் சென்றார். அப்போதே எதிர்க்கட்சிகளுக்கு பீதி அதிகரித்து விட்டது. இன்று அரசியல் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவே கோவை வந்திருக்கும் மோடியின் அடுத்த கட்ட நகர்வுகளை எதிர்க்கட்சிகள் காண காத்திருக்கின்றன. இந்த முறை என்னவெல்லாம் நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்..!