டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை… மன உளைச்சலில் மோடி… ‘பாத்துட்டு சும்மா இருக்க முடியாது’!

 

டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை… மன உளைச்சலில் மோடி… ‘பாத்துட்டு சும்மா இருக்க முடியாது’!

அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்களால் அரங்கேறிவரும் வன்முறைச் செய்தி அறிந்து மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகக் கூறியுள்ள பிரதமர் மோடி, ஜனநாயக வழிமுறையைத் தகர்க்கும் போராட்டங்களை அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. அதில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெற்றார். அவரின் வெற்றியைப் பொறுத்துக்கொள்ள முடியாத குடியரசுக் கட்சியின் வேட்பாளரும் அதிபருமான டிரம்ப், தொடர்ந்து பைடனின் வெற்றி முறைகேடானது என்று குற்றம் சுமத்திவந்தார்.

அதுமட்டுமில்லாமல் பைடனின் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடந்து அதில் தோல்வியும் கண்டார். ஒருபுறம் டிரம்ப் பைடனுக்கு எதிராகக் களமாடி வந்தாலும், மறுபுறம் அதிகாரத்தை பைடன் தலைமையிலான அரசுக்கு மாற்றும் வேலை தீவிரமாக நடைபெற்றுவந்தது.

டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை… மன உளைச்சலில் மோடி… ‘பாத்துட்டு சும்மா இருக்க முடியாது’!

அமெரிக்க தேர்தல் நடைமுறையின்படி, மாகாணங்களில் தேர்ந்தெடுக்கப்படும் எலக்டரல் உறுப்பினர்கள் வாக்களித்து தான் அதிபரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த வகையில் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி எலக்டரல் உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

இந்த வாக்குப்பெட்டி மிகப் பாதுகாப்பாக நாடாளுமன்ற கட்டட்த்திற்கு வந்ததையடுத்து, இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. இந்த வாக்கு எண்ணிக்கை முடிவில் பைடன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். அதன்பின் அதிகாரம் பரிமாற்றம் செய்யப்படும்.

வாக்கு எண்ணிக்கை நடந்துகொண்டிருக்கும்போதே அங்கு திரண்ட ஏராளமான டிரம்பின் ஆதரவாளர்கள் அத்துமீறி வன்முறையில் ஈடுபட்டனர். இதனைத் தடுப்பதற்காக ஆயிரக்கணக்கிலான பாதுகாப்புப் படையினர் களமிறக்கப்பட்டனர். ஆனால் அவர்களையும் மீறி கட்டடத்துக்குள் நுழைந்து தங்களது வெறியாட்டத்தை நிகழ்த்தினர் டிரம்பின் ஆதரவாளர்கள்.

இதையடுத்து நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். கலவரத்தின் எதிரொலியாக தனது ஆதரவாளர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு வீடியோ வெளியிட்டார். ஆனால் அந்த வீடியோவிலும் பைடனின் வெற்றியைக் குறை சொல்வதை அவர் மறக்கவில்லை.

டிரம்ப் ஆதரவாளர்களின் இந்தச் செயலை உலக நாடுகளிலுள்ள தலைவர்கள் அனைவரும் தங்களது கண்டனத்தைப் பதிவுசெய்து வருகின்றனர். டிரம்ப் சார்ந்த குடியரசுக் கட்சித் தலைவர்களும் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். அந்த வகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் தனது கருத்தைப் பதிவுசெய்துள்ளார்.

டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை… மன உளைச்சலில் மோடி… ‘பாத்துட்டு சும்மா இருக்க முடியாது’!

இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், “வாசிங்டனில் அரங்கேறிவரும் வன்முறைச் செய்திகளைக் கண்டு மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். அமைதியான முறையில் அதிகாரப் பரிமாற்றம் நிகழ வேண்டும். ஜனநாயகத்தை வழிமுறையைச் சட்டத்திற்குப் புறம்பான போராட்டங்களால் தகர்த்தெறிய ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என்று காட்டாமாகக் குறிப்பிட்டுள்ளார்.