‘கூட்டுறவு வங்கியில் நகைக்கடனை நிறுத்தியதால் மக்கள் அவதி’ தொ.மு.ச. பேரவை மு.சண்முகம்

 

‘கூட்டுறவு வங்கியில் நகைக்கடனை நிறுத்தியதால் மக்கள் அவதி’ தொ.மு.ச. பேரவை மு.சண்முகம்

கொரோனா பாதிப்பால் உலகமே முடங்கியுள்ளது. இந்தியாவில் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகமும் அதற்கு விதி விலக்கல்ல. ஜூலை 31-ம் தேதி வரை பொதுப் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதனால் மக்கள் எங்கும் வேலைக்கும் செல்ல முடியவில்லை. கையிலிக்கும் நகைகளை குறைந்த வட்டியில் அடகு வைக்க அவர்கள் நம்பியிருந்தது கூட்டுறவு வங்கிகளை. அதற்கும் ஆபத்து வந்துவிட்டது. இது குறித்து தொ.மு.ச. பேரவையின் பொதுச்செயலாளர் மு.சண்முகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

‘கூட்டுறவு வங்கியில் நகைக்கடனை நிறுத்தியதால் மக்கள் அவதி’ தொ.மு.ச. பேரவை மு.சண்முகம்

அந்த அறிக்கையில், ‘கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் முதல் நகர, மத்திய – மாநில கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கும் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கும் நகைக்கடன் வழங்கி வந்தார்கள். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அவர்கள் திடீரென நேற்று வாய்மொழி உத்தரவாக அனைத்து கூட்டுறவு வங்கிகளும் இனி புதிய நகைக்கடன் வழங்கக் கூடாது, பழைய நகைக் கடன்களுக்கான வட்டியை மட்டும் செலுத்தி புதுப்பித்து வரும் நடைமுறையினையும் நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்கள். இந்தச் செய்தி அடித்தட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா நோய் எனும் கொடுமையினால் கூலி வேலைக்குச் செல்லக்கூட போக்குவரத்து வசதியில்லாமல் ஏழை எளிய மக்கள் பரிதவித்து வருகிறார்கள். விவசாயிகள் தாங்கள் பெற்ற கடனைத் திரும்பச் செலுத்துவதற்கு தான் விளைவித்த பொருள்கள் சந்தையில் விலை போகாமல் தனியார்களிடம் அடிமாட்டு விலைக்கு விற்க வேண்டிய நிலையில் உள்ளார்கள்.

‘கூட்டுறவு வங்கியில் நகைக்கடனை நிறுத்தியதால் மக்கள் அவதி’ தொ.மு.ச. பேரவை மு.சண்முகம்

தமிழகத்தில் பருத்தி மற்றும் நெல் விளைந்தும் அரசு விரைவாக கொள்முதல் செய்யாத காரணத்தினால் மழையில் நனைந்து பெருத்த சேதத்திற்கு உள்ளாகி விவசாயிகள் நட்டமடைந்துள்ளனர். கூலித் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர்கள் போன்று அனைத்து பிரிவு மக்களும் கொரோனா தடைக்காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து இருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்நாளில் சேர்த்து வைத்த நகைகளை அடகு வைத்து குடும்பத்தை நடத்தி வருகிறார்கள்.

அவசரத் தேவைக்கு அவர்களுடைய நகைகள் பேருதவியாக உள்ளது. இந்தச் சூழலில் நகைக் கடன் கொடுப்பதையும் இதற்கு முன்வாங்கிய கடனை வட்டியை மட்டும் செலுத்தி புதுப்பித்துக் கொள்ளும் நடவடிக்கைகளையும் அறவே ரத்து செய்திருப்பது ஏழை எளிய, உழைக்கும் மக்களுக்கு தமிழக அரசு செய்துள்ள மாபெரும் துரோகமாகும். எனவே, தமிழக அரசு இந்த உத்திரவினை திரும்பப் பெற்று வழக்கம் போல் நகைக்கடனை வழங்கவும், புதுப்பிக்கவும் உத்தரவு வழங்கிடுமாறு தொ.மு.ச. பேரவை சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.’ என்று குறிப்பிட்டுள்ளார்