டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்!

 

டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்!

விருதுநகர்

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு கிளம்பி சென்றனர்.

விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ராமசாமியாபுரம் பகுதியில் அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. பொதுமுடக்கம் காரணமாக கடை மூடப்பட்டிருந்த நிலையில், அரசின் தளர்வுகள் காரணமாக கடையை திறப்பதற்காக இன்று காலை ஊழியர்கள் வந்தனர். அப்போது, கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கடை முன்பு திரண்டு, ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்!

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த கூமாப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து, கடையை மூடக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, டாஸ்மாக் கடையை திறக்க முடியாமல் ஊழியர்கள் திரும்பிச் சென்றனர். மேலும், மது வாங்குவதற்காக வந்து காத்திருந்த மதுப்பிரியர்கள் கடை, திறக்காததால் ஏமாற்றத்துடன் வேறு கடைகளுக்கு புறப்பட்டுச் சென்றனர்.