மலேசியாவில் சிக்கியுள்ள மகனை மீட்கக்கோரி, ஈரோடு எஸ்.பி-யிடம் பெற்றோர் மனு

 

மலேசியாவில் சிக்கியுள்ள மகனை மீட்கக்கோரி, ஈரோடு எஸ்.பி-யிடம் பெற்றோர் மனு

ஈரோடு

மலேசியாவில் சிக்கித் தவிக்கும் மகனை மீட்டுத் தரக்கோரி, ஈரோடு மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் பெற்றோர் கண்ணீர் மல்க புகார் அளித்தனர்.

ஈரோடு மாவட்டம் மோளக்கவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் உமாபாரதி – நளினி தம்பதியினர். சாயப்பட்டறையில் பணிபுரிந்து வரும் இவர்கள் இன்று ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், தங்களது மகன் கவுதம் (22), ஒப்பந்த அடிப்படையில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மலேசியாவுக்கு பணிக்கு சென்றதாகவும், பின்னர் மார்ச் மாதம் போனில் பேசிய நிலையில், அதன் பின்னர் கவுதமை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வந்ததாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் மற்றொரு நபரின் செல்போனில் இருந்து பேசிய கவுதம், தனது செல்போன், பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை சிலர் பறித்து கொண்டதாகவும், யாரிடமும் பேச அனுமதிக்க வில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், தன்னை காப்பாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மலேசியாவில் சிக்கியுள்ள மகனை மீட்கக்கோரி, ஈரோடு எஸ்.பி-யிடம் பெற்றோர் மனு

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு உமாபாரதியை தொடர்பு கொண்ட மர்மநபர்கள் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான், கவுதமை அனுப்புவதாக தெரிவித்துள்ளார். மேலும் தாங்கள் வற்புறுத்தியும் கவுதமிடம் பேச அனுமதி மறுத்து அழைப்பினை துண்டித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, மலேசியாவில் தனது மகனின் உயிருக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளதால், அவரை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.பி-யிடம் கோரிக்கை விடுத்தனர்.