அடுத்தவாரம் தாக்கலாகிறது காகிதம் இல்லா இ-பட்ஜெட்

 

அடுத்தவாரம் தாக்கலாகிறது காகிதம் இல்லா இ-பட்ஜெட்

சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதல்முறையாக காகிதம் இல்லாத இ- பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் பட்ஜெட்டை பார்க்கும் வகையில் கணினி பொருத்தும் பணி நடைபெறுகிறது.

அடுத்தவாரம் தாக்கலாகிறது காகிதம் இல்லா இ-பட்ஜெட்

தமிழக நிதிநிலை அறிக்கை வரும் 13ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. சட்டப்பேரவை நிகழ்வுகளை டிஜிட்டல் மயமாக்கும் வகையில் இந்த இ- பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் சென்னை கலைவாணர் அரங்கில் செய்யப்பட்டுள்ளது. நூல் வடிவிலான பட்ஜெட்டாக இல்லாமல், அனைத்து எம்.எல்.ஏக்கள் அமரும் இருக்கைக்கு முன்பு கையடக்க கணினி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வேகமாக தொடர்பு கொள்ளுதல் மற்றும் முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் கையடக்க சாதனங்கள் வாயிலாக தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே பேரவை நிகழ்ச்சிகள் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள முடியும். காகிதமில்லா சட்டப்பேரவை என்ற அடிப்படையில் கொண்டு வரப்படும் இந்தத் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசின் மின்னணு நிறுவனமான எல்காட் மூலம் கையடக்க கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த கையடக்க கணினியில் சட்டப்பேரவை நிகழ்வுகளைத் தவிர வேறு எதனையும் பார்க்க முடியாது. சட்டமன்ற உறுப்பினர்கள் கையடக்க கணினியை பயன்படுத்தும் வகையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இ – பட்ஜெட் செயல்படுத்துவதன் மூலம் காகிதப் பயன்பாடு வெகுவாகக் குறைக்கப்படுவதோடு, அஞ்சலகச் செலவு உள்ளிட்ட இதர செலவுகளும் குறைக்கப்படும் நோக்கில் செயல்படுத்தப்படவுள்ளது.