நம்மையே வெறுமையாக்க அழைக்கும் குருத்தோலை ஞாயிறு!

 

நம்மையே வெறுமையாக்க அழைக்கும் குருத்தோலை ஞாயிறு!

இயேசு ஜெருசலேம் நகருக்குள் வெற்றியின் அரசனாய் பவனி வந்த நிகழ்வை கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் குருத்தோலை ஞாயிறு என்று கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறு இன்று (மார்ச் 28, 2020) கொண்டாடப்படுகிறது.

குருத்தோலை ஞாயிறு தொடங்கி ஒரு வார காலம் புனித வாரமாக கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கின்றனர். இந்த ஒரு வாரமானது இயேசுவின் மரணம், அதற்கு முன்னதாக அவர் பட்ட வேதனைகளை நினைவுகூரும் வாரமாக உள்ளது. இயேசுவின் மரணத்தை நினைவு கூறும் வகையில் வருகிற வெள்ளிக்கிழமை புனித வெள்ளியும் இயேசுவின் உயிர்ப்பை நினைவு கூறும் வகையில் ஏப்ரல் 4ம் தேதி ஈஸ்டர் பண்டிகையையும் கொண்டாட உள்ளனர்.

நம்மையே வெறுமையாக்க அழைக்கும் குருத்தோலை ஞாயிறு!

இன்றைய நாளில் இயேசு தன்னை வெறுமையாக்கியது போல நம்மையும் வெறுமையாக்க அழைப்பு விடுக்கிறார். 2000ம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு ஜெருசலேம் நகருக்குள் நுழைந்த போது மக்கள் ஆலிவ் மரக் கிளைகளை வெட்டி அதை வெற்றியின் சின்னமாக தரையில் விரித்து இயேசுவை வரவேற்றனர். கிறிஸ்தவர்கள் கைகளில் ஏந்தும் ஓலைக் குருத்து நன்மை மற்றும் வெற்றியின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. இயேசுவின் இறப்புக்கு பிறகு நிகழும் உயிர்ப்பு என்ற வெற்றியின் சின்னமா இது இருக்கிறது.

இயேசு ஜெருசலேம் நகருக்குள் நுழையும் போது கழுதையின் மீது ஏறி அமர்ந்து வந்தார். சக்கிரியாஸ் ஆகமம் 9:9 “சீயோன் மகளே, மிகுந்த மகிழ்ச்சியால் அக்களி, யெருசலேம் மகளே, ஆர்ப்பரி; இதோ, உன் அரசர் உன்னிடம் வருகிறார், நீதியும் வெற்றியும் பெற்றுக்கொண்ட அந்த வீரர் எளியவர்; கழுதையின் மேலும், பொதிமிருகக் குட்டியின் மேலும் அமர்ந்து வருகிறார்” என்று சொல்கிறது. இந்த இறைவாக்கு நிறைவேறும் வகையில் அவர் கழுதையின் மீது அமர்ந்து வந்தார்.

இயேசு யூத சமுதாயத்தைச் சேர்ந்தவர். அன்றைய யூத சமுதாயத்தில் கழுதை என்பது புறவினத்தாரின் அடையாளமாக. மதிப்பற்ற விலங்கின் அடையாளளமாக பார்க்கப்பட்டது. அரசர்கள், பணக்காரர்கள் குதிரை மீது செல்வார்கள். படை எடுத்துச் செல்லும் அரசன் குதிரை மீது அமர்ந்து செல்வான். ஆனால் வெற்றி வீரனாக ஜெருசலேம் நகருக்குள் வரும் இயேசு கழுதை மீது அமர்ந்து வருகிறார். அடுத்த நாட்டின் மீது படையெடுக்க குதிரை மீது அமர்ந்து செல்லும் மன்னன் தான் வெற்றி பெற அந்த நாட்டை பிடிக்கும் போது அங்குள்ள மக்களை அழிப்பான். ஆனால், இயேசு அமைதியின் விலங்காய் இருக்கிற கழுதை மீது செல்வதன் மூலம் அடுத்தவர்களை அழித்து மன்னனாக வரவில்லை. நான் எளிமையாக, என்னையே அழித்துக்கொண்டு, என்னையே முழுமையாக ஒப்படைத்து இந்த உலகை வெல்ல வந்துள்ளேன் என்று சொல்கிறார்.

கடவுள் தன்மையிலிருந்த இயேசு, இறைத் தன்மையில் இருக்க வேண்டியதை இருக்கமாய் பிடித்திருக்கவில்லை. இறைத்தன்மையை இழந்து, கடவுளின் மகன் என்பதை பற்றிக் கொண்டிருக்காமல் இழந்து, மனிதனாக வந்தார், தன்னை வெறுமையாக்கி சிலுவையின் சாவுக்கு தன்னை ஒப்புக்கொடுத்தார்.

இயேசு ஜெருசலேம் நகருக்குள் நுழையும் போது அங்கிருந்த மக்கள் தாவிது மகனுக்கு ஓசன்னா என்று வாழ்த்தினார்கள். இயேசுவை அரசனாகப் பார்த்தார்கள். ரோமானியர்களின் ஆட்சியிலிருந்து, அடிமை நிலையிலிருந்து அரசியல் நிலையில் நம்மை மீட்பார் கருதினார்கள். இயேசுவுக்குத் தான் அரண்மனையில் வசிக்கப் போவது இல்லை, அரியணை ஏறப்போவது இல்லை என்று தெரிந்திருந்தார். தன்னுடைய அரண்மனை, அரியாசனம் எல்லாம் சிலுவை மரம்தான் என்பதை உணர்ந்திருந்தார்.

இயேசு நகருக்குள் நுழைந்தபோது தங்களிடமிருந்த உடைகளை தரையில் விரித்து அவரை அழைத்துச் செல்கின்றனர். அரசர்கள் வரும்போது கம்பளம் விரித்து வரவேற்பது வழக்கம். அது போல இயேசுவை வரவேற்கின்றனர் மக்கள். அதே நேரத்தில் தான் அரண்மனைக்கு அல்ல கல்வாரி மலைக்குச் செல்லப் போகிறேன். அங்கு தன்னுடைய உடைகளைக் கூட எடுத்துக்கொள்ளப் போகிறார்கள் என்பதை இயேசு அறிந்திருந்தார். எல்லாவற்றையும் இழந்த இயேசு, நிர்வாணமாக நமக்காக மரித்தார்.

இதன் மூலம் நம் ஒவ்வொருவருக்கும் இயேசு ஒரு கருத்தை சொல்ல வருகிறார். மகனே, மகளே அச்சத்திலும் பயத்திலும் வாழ்ந்து வருகிறீர்கள். இந்த துன்பத்தில் உங்களுடன் நானும் பங்கேற்கிறேன். உங்கள் துன்பத்தில் நானும் உடன் இருக்கிறேன். உங்களுடன் இணைந்து இருக்கிறேன், உங்கள் துன்பத்தில் பங்கேற்கிறேன். துன்பத்தைக் கண்டு ஒடி ஒளியவில்லை. உன்னோடே நான் இருக்கிறேன். இந்த துன்பத்துக்குப் பிறகு ஒரு இன்பம் உண்டு… கலங்காதே என்கிறார். எனவே, இன்றைய நாளில் நாம் எதிர்கொள்ளும் துன்பங்களை மன உறுதியோடு ஏற்று எதிர்கொள்வோம். நம்மை வெறுமையாக்கி மற்றவர்களை அன்பு செய்வோம். அதைத் தொடர்ந்து வரும் மகிழ்ச்சியில் நிலைத்திருப்போம்!