பழனி கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.64 கோடி வசூல்!

 

பழனி கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.64 கோடி வசூல்!

திண்டுக்கல்

பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1 கோடியே 64 லட்சம் ரொக்கப்பணம், 945 கிராம் தங்கம் மற்றும் 33 கிலோ வெள்ளி வசூலாகி உள்ளது.

முருக கடவுளின் 3ஆம் படைவீடாக, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, சுவாமியை தரிசித்து செல்வது வழக்கம். அப்போது, பக்தர்கள் நேர்த்திக்கடனாக ரொக்கப்பணம் மற்றும் தங்கம், வெள்ளியினால் ஆன வேல், காவடி, பாதம், தாலி உள்ளிட்டவற்றை செலுத்துவது வழக்கம்.

பழனி கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.64 கோடி வசூல்!

இவ்வாறு பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் 24 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டு வருகிறது. இதன்படி, நேற்று கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் (பொறுப்பு) செந்தில்குமார், கரூர் தான்தோன்றிமலை கோவில் உதவி ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர் முன்னிலையில், கோவில் கார்த்திகை மண்டபத்தில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் கோவில் பணியாளர்கள், கல்லூரி மாணவிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதன் முடிவில், உண்டியல் காணிக்கையாக ரூ.1 கோடியே 64 லட்சத்து 3 ஆயிரத்து 130 வசூலாகி உள்ளது. மேலும், 945 கிராம் தங்கம் மற்றும் 33 கிலோ 367 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைக்கப் பெற்றுள்ளது. அத்துடன், 84 வெளி நாட்டு கரன்சி நோட்களும் வசூலாகி உள்ளது..