பிரதமர் மோடியிடம் தன்னுடைய புறாவை திருப்பி கேட்கும் பாகிஸ்தானியர்

 

பிரதமர் மோடியிடம் தன்னுடைய புறாவை திருப்பி கேட்கும் பாகிஸ்தானியர்

இஸ்லாமாபாத்: தன்னுடைய புறாவை திரும்ப தருமாறு பாகிஸ்தானியர் ஒருவர் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 25ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த புறா ஒன்று பிடிபட்டது. அந்தப் புறா உளவுப் பார்ப்பதற்காக அனுப்பப்பட்டதாக கூறி அதை ஹிராநகர் செக்டாரில் உள்ள மன்யாரி கிராம மக்கள் கைப்பற்றினர். இதையடுத்து அந்த புறா தன்னிடத்தில் ரகசிய தகவல்கள் ஏதேனும் வைத்துள்ளதா என்று இந்திய உளவுத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஏனெனில், அந்தப் புறாவின் காலில் ரகசிய எண்கள் கொண்ட வளையங்கள் பொருத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தியாவுக்குள் தவறுதலாக நுழைந்த தன்னுடைய புறாவை தன்னிடமே மீண்டும் ஒப்படைக்குமாறு பாகிஸ்தானின் பக்கா சங்கர்காரா என்ற கிராமத்தைச் சேர்ந்த நபரான ஹபிபுல்லா என்பவர் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

ஹபிபுல்லாவின் கிராமம் இந்திய எல்லையில் இருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் புறாவின் காலில் உள்ள வளையத்தில் தனது செல்போன் எண்ணை தான் பதிந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். அதில் ரகசிய எண்கள் எதுவும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.