சீனா’ என்று பிரதமர் மோடி குறிப்பிடுவதில்லையே, இதன் மர்மத்தை யாராவது விளக்குவார்களா?- சிதம்பரம் கேள்வி

 

சீனா’ என்று பிரதமர் மோடி குறிப்பிடுவதில்லையே, இதன் மர்மத்தை யாராவது விளக்குவார்களா?- சிதம்பரம் கேள்வி

இந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன படைவீரர்களின் இடையே திடீர் தாக்குதல் ஏற்பட்டது. அந்த மோதலில் இந்திய மற்றும் சீன ராணுவத்தில் பலர் படுகாயம் அடைந்த நிலையில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்து விட்டதாகவும் 4 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த மோதலால் எல்லையில் பதற்றமான சூழல் அதிகரித்தைத்தொடர்ந்து, இரு நாட்டுப் படைகளும் தங்களது படைகளை விலக்கிக் கொண்டது. இந்த தாக்குதலில் சீன ராணுவ வீரர்கள் 35 பேர் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்தது. இந்த திடீர் தாக்குதலால் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் சீனாவை பற்றி ஒரு வார்த்தை கூட நேரடியாக குறிப்பிடாமல் அமைதி காத்து வந்த பிரதமர் மோடி எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் முப்படை தலைவரும் சென்றனர். மேலும் மோதலில் காயமடைந்த வீரர்களிடம் பிரதமர் நலம் விசாரித்தார்.

இந்நிலையில் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “முதலமைச்சர்கள் கூட்டத்தில் உரை, தொலைக்காட்சியில் உரை, லடாக்கில் ஜவான்கள் மத்தியில் உரை என்று எந்த உரையிலும் ‘சீனா’ என்று பிரதமர் மோடி குறிப்பிடுவதில்லையே, இதன் மர்மத்தை யாராவது விளக்குவார்களா? இந்திய நிலப்பகுதியில் ஆக்கிரமித்தது சீனத் துருப்புகளா அல்லது சந்திரமண்டலத்திலிருந்து வந்த அந்நியர்களா? பிரதமர் மோடி அஞ்சுகிறார் என்று சொல்லமாட்டேன், ஆனால் தயங்குகிறார் என்று சொல்வேன். ஏன் இந்தத் தயக்கம்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.