கொரோனா அச்சத்தால் உயிரை மாய்த்துக் கொண்ட நெல்லை பிரபல அல்வா கடை உரிமையாளர்

 

கொரோனா அச்சத்தால் உயிரை மாய்த்துக் கொண்ட நெல்லை பிரபல அல்வா கடை உரிமையாளர்

கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நெல்லை பிரபல அல்வா கடை உரிமையாளர் அங்குள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை நெல்லையப்பர் கோயில் கீழ ரத வீதியில் புகழ்பெற்ற இருட்டு கடை அல்வா 100 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வருகிறது. இந்த அல்வா கடை தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநில மக்களின் பிரசித்தி பெற்றதாக இருந்து வருகிறது. கடையின் உரிமையாளர் ஹரிசிங்கின் பூர்விகம் ராஜஸ்தான் மாநிலம் ஆகும். இதனிடையே, அல்வா கடையின் உரிமையாளர் ஹரிசிங் சிறுநீரகத் தொற்று காரணமாக 3 நாள்களுக்கு முன்பு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார். அப்போது, அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கும் அவருடைய மருமகனுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கொரோனா அச்சத்தால் உயிரை மாய்த்துக் கொண்ட நெல்லை பிரபல அல்வா கடை உரிமையாளர்

இதையடுத்து, அவர் திருநெல்வேலி பெருமாள்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஹரிசிங் அனுமதிக்கப்பட்டார். சில நாள்களுக்கு முன்பு கடையில் வியாபாரம் செய்த நிலையில் கொரோனா தொற்று தன்னால் பிறருக்கும் பரவி இருக்குமோ என்ற அச்சத்தில் மனமுடைந்த நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், ஹரிசிங்குக்கு சிகிச்சை அளிப்பதற்காக அறைக்கு சென்ற செவிலியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அறையில் ஹரிசிங் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து, காவல்துறைக்கும், மாநகராட்சிக்கும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்தது. விரைந்து வந்த காவல்துறையினரும், அரசு ஊழியர்களும் அவரது உடலை பாதுகாப்புடன் எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.

தற்கொலை செய்து கொண்ட ஹரிசிங் வீடு இருக்கும் திருநெல்வேலி டவுன் அம்மன் சன்னதி தெரு, முழுமைக்கும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு தடுப்புகள் போடப்பட்டு பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளதோடு, அவருடைய அல்வா கடையிலும் மாநகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்தனர். கொரோனா அச்சத்தால் பிரபல அல்வா கடை உரிமையாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நெல்லை மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.