ஒட்டர்பாளையம் வீடியோ விவகாரம்… கோபால்சாமி மீதான வன்கொடுமை வழக்கை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

 

ஒட்டர்பாளையம் வீடியோ விவகாரம்… கோபால்சாமி மீதான வன்கொடுமை வழக்கை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

கோவை

கோவை ஓட்டர்பாளையம் சம்பவத்தில் விவசாயி கோபால்சாமி மீது பதியப்பட்ட வன்கொடுமை வழக்கை ரத்து செய்யக்கோரி, அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் அன்னூரை அடுத்த ஒட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் விவசாயி கோபால்சாமி என்பவரது காலில், கிராம உதவியாளர் முத்துச்சாமி விழுந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் மற்றும் வருவாய் துறையினர் தனித்தனியே விசாரணை மேற்கொண்டு, விவசாயி கோபால்சாமி மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

ஒட்டர்பாளையம் வீடியோ விவகாரம்… கோபால்சாமி மீதான வன்கொடுமை வழக்கை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பாக கிராம உதவியாளர் முத்துச்சாமி, விஏஓ அலுவலகத்தில் வைத்து கோபால்சாமியை தாக்கியதும், பின்னர் அவரது காலில் விழுந்து மன்னிப்புக் கோவருது போல நாடகமாடியதும் வெளிச்சத்திற்கு வந்தது. இதனை அடுத்து, விஏஓ மற்றும் கிராம உதவியாளர் முத்துச்சாமியை பணிடைநீக்கம் செய்து வருவாய் துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும், கோபால்சாமியை தாக்கி காயம் ஏற்படுத்தியதாக, அன்னூர் காவல் நிலையத்தில் கிராம உதவியாளர் முத்துச்சாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், விவசாயி கோபால்சாமி மீது பதியப்பட்டு உள்ள வன்கொடுமை சட்டத்தை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் இன்று அன்னூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு இந்த வீடியோ விவகாரத்தில் போலீசார் உரிய விசாரணை மேற்கொள்ளவும், விவசாயி கோபால்சாமி மீது பதிவுசெய்த வன்கொடுமை வழக்கை ரத்து செய்யவும் கோரி முழக்கங்களை எழுப்பினர். போராட்டம் காரணமாக அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.