‘ கே.சி வீரமணி வீட்டில் ரெய்டு… விடியா அரசின் பழிவாங்கும் நடவடிக்கை’ – ஓபிஎஸ், ஈபிஎஸ் கண்டனம்!

 

‘ கே.சி வீரமணி வீட்டில் ரெய்டு… விடியா அரசின் பழிவாங்கும் நடவடிக்கை’ – ஓபிஎஸ், ஈபிஎஸ் கண்டனம்!

முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவது விடியா அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு மற்றுமொரு உதாரணம் என அதிமுகவின் ஓபிஎஸ் – ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில், ‘கருத்து மோதல் நமக்குள் ஏற்படலாம்’ வளர்ச்சிக்கு அறிகுறி அது. நாம் மக்கள், வன விலங்குகள் அல்ல, இது நாடு காடு அல்ல. காட்டு முறையை கையாண்டால் அதற்குப் பெயர் ஜனநாயகம் ஆகாது. பாசிசம் முறை அது என்றார் பேரறிஞர் அண்ணா. அவர்களின் இந்த கூற்றுக்கு முற்றிலும் முரணான வகையில் ஜனநாயகத்தை குழித்தோண்டி புதைக்கும் நடவடிக்கையில் விடியா திமுக அரசு ஈடுபட்டு வருகிறது.

‘ கே.சி வீரமணி வீட்டில் ரெய்டு… விடியா அரசின் பழிவாங்கும் நடவடிக்கை’ – ஓபிஎஸ், ஈபிஎஸ் கண்டனம்!

அண்மையில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் சாத்தியப்படாத வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, அதை நிறைவேற்ற முடியாமல் மக்கள் வெறுப்பினை சம்பாதித்து கொண்டிருக்கும் நிலையில் அதனை மூடி மறைத்து உள்ளாட்சித் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதற்காக முன்னாள் அமைச்சரும் திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளரும் கழகத்தின் தீவிர செயல் வீரருமான கே.சி வீரமணி அவர்களுடைய வீட்டிலும் அவரது உறவினர்கள், நண்பர்கள் என்று நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு எதிராக தேர்தல் வேலை பார்த்தவர்கள் என சுமார் 28 இடங்களில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ‘ஸ்டாலின் போலீசார்’ சோதனை என்ற பெயரில் இன்று ஒரு கபட நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். இது உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் திட்டமிட்டு ஆடும் நாடகமே தவிர வேறொன்றுமில்லை.

550 க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை அளித்த திமுக 3 சதவீத வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றது. வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததால் மக்களின் வெறுப்புக்கு ஆளாகியுள்ளது. பொதுவாக உள்ளாட்சி தேர்தல் தமிழ்நாடு முழுவதும் 2 கட்டமாக நடைபெறும். ஆனால் ஒன்பது மாவட்டங்களுக்கு இரண்டு கட்டமாக நடத்துவதில் இருந்தே திமுகவின் தோல்வி பயம் தெரிகிறது. இதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடுவோம். ஸ்டாலினின் அதிகார வர்க்கம், குடும்ப ஆதிக்கம் ஆகியோரின் கூட்டணியை முறைப்படி எதிர்த்து தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளோம்.

முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர் விஜயபாஸ்கர், வேலுமணி ஆகியோரை தொடர்ந்து கே.சி வீரமணி வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. அதிமுகவின் செயல்பாடுகளை சீர்குலைக்கும் விதமாக அவரது வீட்டில் சோதனை நடத்தப்படுகிறது. இந்த சலசலப்புக்கும் பயமுறுத்தலுக்கும் அதிமுக அடிபணிந்ததில்லை. சட்டம் மீது நம்பிக்கை உள்ளது. ஜெயலலிதாவின் வழிவந்த அரசு சட்டப்படிதான் ஆட்சி செய்தது. இந்த ஒடுக்குமுறைகளையும் சட்டத்தின் துணைகொண்டு எதிர்கொள்வோம். அதிமுக நிர்வாகிகளை பழிவாங்கும் நடவடிக்கைகளை விட்டுவிட்டு தேர்தல் சமயத்தில் அளித்த 505 க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவும் தமிழ்நாட்டை தொடர்ந்து முதன்மை மாநிலமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

அரசியல் கட்சிகளை மிரட்டி அதன் மூலம் மக்களை பணிய வைத்து தங்களுக்கு வாக்களிக்க வைத்து விடலாம் என்று மனப்பால் குடிக்காமல் ‘மக்களைப் பார்த்து ஆட்சியாளர்கள் அஞ்ச வேண்டும். ஆட்சியாளரை பார்த்து மக்களை அஞ்சக்கூடாது. அது தான் உண்மை ஜனநாயகம்’ என்ற பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிக்கேற்ப ஜனநாயக முறையில் தேர்தலை சந்திக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.