ஆக்கிரமிப்பு மண்டபத்தை அகற்ற எதிர்ப்பு… பேரூராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

 

ஆக்கிரமிப்பு மண்டபத்தை அகற்ற எதிர்ப்பு… பேரூராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

திண்டுக்கல்

பழனி அருகே பொது பாதையை ஆக்கிரமித்து கட்டிய கோவில் மண்டபத்தை இடிக்க முயன்ற பேரூராட்சி அதிகாரிகளை, கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த பாலசமுத்திரம் பகுதியில் ஒரு சமுதாயத்தினருக்கு சொந்தமான முத்தாலம்மன்‌ கோவில் மண்டகப்படி மண்டபம் உள்ளது. அதற்கு முன்பாக உள்ள பொதுஇடத்தை ஆக்கிரமித்து சிறு மண்டபம் ஒன்றும் கட்டப்பட்டு உள்ளது. இதனால் வீட்டிற்கு செல்லும் பாதை மறைக்கப்பட்டதாக அதே பகுதியை சேர்ந்த ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், 4 வாரங்களுக்குள் ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆக்கிரமிப்பு மண்டபத்தை அகற்ற எதிர்ப்பு… பேரூராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

நீதிமன்ற உத்தரவின் பேரில், நேற்று ஆக்கிரமிப்பை அகற்ற பேரூராட்சி செயலர் கமர்தீன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது, கோவில் மண்டபத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த 100-க்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கோவிலை சூழ்ந்து கொண்டு முற்றுகையிட்டனர். இதனால் வேறு வழியின்றி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை அதிகாரிகள் கைவிட்டனர்.

நீதிமன்றத்திற்கு சென்று தடை வாங்கி வந்தால் மட்டுமே ஆக்கிரமிப்பை அகற்றுவதை கைவிட முடியும் என கூறிய அதிகாரிகள், மற்றொரு தேதியில் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த பேரூராட்சி அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பாலசமுத்திரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.