கல் குவாரி அமைக்க எதிர்ப்பு… தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை…

 

கல் குவாரி அமைக்க எதிர்ப்பு… தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை…

தூத்துக்குடி

ஶ்ரீவைகுண்டம் அருகே கல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் வட்டத்திற்கு உட்பட்டது ஶ்ரீமூலக்கரை கிராமம். இங்கு சுமார் 1500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், ஶ்ரீமூலக்கரை கிராமத்தின் வடக்கு பகுதியில் புதிதாக கல் குவாரி தொடங்க பணிகள் நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக ஶ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படும் என்பதால், குவாரி அமைக்க அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஆனால், எதிர்ப்பையும் மீறி குவாரியை திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

கல் குவாரி அமைக்க எதிர்ப்பு… தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை…

இதனால் அதிர்ச்சியடைந்த 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது, கிராம மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கல் குவாரிக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும், அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அவர்கள் எச்சரித்தனர். போராட்டம் காரணமாக தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.