மயானத்தில் பூங்கா அமைக்க எதிர்ப்பு… நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை சிறைபிடித்து கிராமமக்கள் போராட்டம்!

 

மயானத்தில் பூங்கா அமைக்க எதிர்ப்பு… நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை சிறைபிடித்து கிராமமக்கள் போராட்டம்!

ஈரோடு

ஈரோடு அருகே மயானத்தில் பூங்க அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் 46 புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி ஆனைக்கல்பாளையம். இங்கு சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது பகுதியில் இறந்தவர்களை புதைப்பதற்காக தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள மயானத்தை பயன்படுத்தி வந்தனர். சுமார் 100 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும், இந்த மயான பகுதியில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலையோர பூங்கா அமைப்பதற்காக இன்று காலை பொக்லைன் இயந்திரத்துடன் அதிகாரிகள் வந்தனர்.

மயானத்தில் பூங்கா அமைக்க எதிர்ப்பு… நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை சிறைபிடித்து கிராமமக்கள் போராட்டம்!

தொடர்ந்து, மயான பகுதியில் மரம் நடுவதற்காக குழிகளை தோண்டினர். இதனை அறிந்த, ஆனக்கால்பாளையம் கிராம மக்கள் மயானத்திற்கு திரண்டு வந்து பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது, நெடுஞ்சாலைத் துறையினர், அதே பகுதியில் உள்ள தனி நபர் ஒருவருக்கு ஆதரவாக மயானத்தை அப்புறப்படுத்த முயற்சி செய்வதாகவும் குற்றம்சாட்டி முழக்கங்களை எழுப்பினர்.

பொதுமக்கள் போராட்டம் காரணமாக நெடுஞ்சாலைத் துறையினர் பூங்கா அமைக்கும் பணியை கைவிட்டு புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.