ஆன்லைன் சூதாட்டம் – தொடரும் தற்கொலைகள்

 

ஆன்லைன் சூதாட்டம் – தொடரும் தற்கொலைகள்

ரம்மி எனப்படும் ஆன்லைன் சூதாட்ட மோகத்தால்,சமீபத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளனது. அவர் மட்டுமல்ல, தற்போது ஏராளமான இளைஞர்கள் ஆன்லைன் சூதாட்டத்தில் மூழ்கி உள்ளனர் என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆன்லைன் சூதாட்டம் – தொடரும் தற்கொலைகள்

இளைஞர்களை கவரும் வகையில் வரும் விளம்பரங்களால், ஏராளமானோரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது ரம்மி ஆன்லைன் சூதாட்டம். கொரோனா ஊரடங்கில் பல இளைஞர்கள் வேலையிழந்து வீடுகளில் உள்ளனர். கல்லூரி மாணவர்களுக்கும் பொழுதுபோக்க வழியில்லாத நிலையில் இருப்பதால், அவர்களையும் குறி வைத்து ஆன்லைன் சூதாட்ட தளங்கள் படையெடுத்து வருகின்றன.

இதுதொடர்பான விளம்பரங்கள் தொலைக்காட்சிகளிலும், சமூக வலைதளங்களில் வந்துகொண்டிருப்பதால், எண்ணற்ற இளைஞர்கள் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி விளையாடி வருகின்றனர்.

இந்த விளையாட்டை பொருத்தவரை, அறிமுக ஊக்கத்தொகையாக ஆன்லைன் ரம்மி நிறுவனம் முதலில் பணம் கொடுக்கிறது. இந்த பணம் சில நிமிடங்களில் கரைந்து விடும். அதன்பின் இளைஞர்கள் தங்களிடம் உள்ள சிறிய அளவு சேமிப்பைக் கொண்டு ஆன்லைன் ரம்மி எனும் சூதாட்டத்தைத் தொடருவார்கள். அடுத்த சில மணி நேரங்களில் அவர்களின் சேமிப்புகள் முழுவதுமாக கரைந்து விடும்.

ஆன்லைன் சூதாட்டம் – தொடரும் தற்கொலைகள்

அதற்கு அடுத்த நாட்களில் கடன் வாங்கிச் சூதாடுவார்கள். எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் அதை முழுமையாக இழக்கக்கூடிய வகையில் இந்த ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களே வடிவமைக்கப்பட்டுள்ளன. விட்டதை பிடிக்க வேண்டும் என்று ஆர்வத்துடனும் வெறியுடன் களம் இறங்கும் போட்டியாளருக்கு, கடைசியில் மிஞ்சுவது வெறும் கைதான்.

இந்த சூதாட்டங்கள் மூலம் பணத்தை இழந்து தவிக்கும் இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. அப்படியான நிகழ்வுதான், புதுச்சேரியை சேர்ந்த விஜயகுமார் என்ற 35 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம்.

ஆன்லைன் சூதாட்டம் – தொடரும் தற்கொலைகள்

ஆன்லைன் சூதாட்டத்தில், தான் சம்பாதித்த தொகை, கடன் வாங்கி என சுமார் 30 லட்சம் வரை,விட்ட நிலையில் தீ குளித்து தற்கொலை செய்துக்கொண்டார்.

லட்சக்கணக்கில் சம்பாதித்து ஈட்டிய சொத்துகளை பறிகொடுத்ததோடு, இறப்பதற்கு முன் , தனது மனைவிக்கு அவர் அனுப்பி வைத்த உருக்கமான ஆடியோ பதிவு ஆன்லைன் சூதாட்டத்தின் அபாயம் எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணம்.

தமிழகம், புதுச்சேரி மட்டுமல்லாது, ஆந்திரா, கர்நாடகம் என மாநில எல்லைகளைக் கடந்து ஆன்லைன் சூதாட்டங்களும், அதில் பணத்தை இழந்தவர்களின் தற்கொலைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

ஆன்லைன் சூதாட்டம் – தொடரும் தற்கொலைகள்

பொதுவாக பொது இடங்களிலோ, மன்றங்களிலோ பணம் வைத்துச் சூதாடினால் அது சட்டப்படி குற்றம் ஆகும். நம்மூரில் பணம் வைத்து சீட்டாடினால் உடனே போலீசார் அவர்களை கைது செய்கின்றனர். ஆனால், இந்த ஆன்லைன் சூதாட்டங்கள் இன்னும் குற்றமாக்கப்படவில்லை. சென்னை உயர் நீதிமன்றம் உள்ளிட்ட பல நீதிமன்றங்களே வலியுறுத்தியும் மத்திய, மாநில அரசுகள் ஆன்லைன் சூதாட்டத்தை இன்னும் குற்றமாக்காதது தான் விசித்திரமாக உள்ளது.

ஆன்லைன் சூதாட்டம் – தொடரும் தற்கொலைகள்

விஜயகுமார் தற்கொலைக்கு பின், புதுச்சேரி அரசு ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. கொடூர அரக்கணமாக வலம் வரும் ஆன்லைன் சூதாட்டம் என்ற ஆக்டோபஸ் இன்னும் பல குடும்பங்களை வளைத்துச் சீரழிப்பதற்குள் மத்திய, மாநில அரசுகள் அந்த விளையாட்டை தடை செய்தால் தான் இளைஞர்களின் தொடர் தற்கொலைக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும் என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.

-தமிழ்தீபன்