ப்ரீ கேஜி முதல் பிளஸ் 2 வரை மாணவர்களை வாட்டும் ஆன்லைன் வகுப்புகள்! – அரசு கட்டுப்படுத்துமா என்று மக்கள் ஏக்கம்

 

ப்ரீ கேஜி முதல் பிளஸ் 2 வரை மாணவர்களை வாட்டும் ஆன்லைன் வகுப்புகள்! – அரசு கட்டுப்படுத்துமா என்று மக்கள் ஏக்கம்

ப்ரீ கேஜி முதல் பிளஸ் 2 வரை அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகிறது. இவற்றை அரசு கட்டுப்படுத்துமா என்ற ஏக்கம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் வேகவேகமாக மூடப்பட்டன. அப்போது எல்லாம் ஆன்லைன் வகுப்புகள் பற்றி கவலைப் படாத பள்ளிகள், புதிய கல்வியாண்டு தொடங்கியதும் பெற்றோர்களிடமிருந்து கட்டணத்தை வசூலிக்க ஆன்லைன் வகுப்பு நடத்தப்போவதாக அறிவித்தன. பள்ளிகள் திறப்பது எப்போது என்றே தெரியாத நிலையில், ஆன்லைனில் பாடம் நடத்துகிறோம், உடனடியாக ஃபீஸ் கட்டுங்கள் என்று எல்லா தனியார் பள்ளிகளும் விடாப்பிடியாக உள்ளன.
புதிதாக மாணவர் சேர்க்கை நடத்த தடை, கட்டணம் வசூலிக்கத் தடை என்று ஏராளமான தடைகள் வெறும் அறிவிப்பாகவே உள்ளன. பள்ளிகள் தங்கள் இஷ்டம்போல பணம் வசூலித்துக்கொண்டேதான் இருக்கின்றன. அதிலும் 9ம் வகுப்புக்கு மேல் உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுத்தால் கூட பரவாயில்லை, பொதுத் தேர்வை சந்திக்க உள்ள மாணவர்கள் என்பதால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால், ப்ரீகேஜி, எல்.கே.ஜி, யு.கே.ஜி குழந்தைகளுக்குக் கூட ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதுதான் வேதனை.

ப்ரீ கேஜி முதல் பிளஸ் 2 வரை மாணவர்களை வாட்டும் ஆன்லைன் வகுப்புகள்! – அரசு கட்டுப்படுத்துமா என்று மக்கள் ஏக்கம்குழந்தைகளுக்கு மொபைல் போன் பழக்கப்படுத்தாதீர்கள், அவர்களுடன் விளையாடுங்கள், பேசுங்கள் என்று இத்தனை நாள் ஆலோசனை கூறியவர்கள் தற்போது அவர்கள் கையில் போனைக் கொடுத்து ஆன்லைன் கிளாசில் பங்கேற்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர். பள்ளிகளில் ஒரு இடத்தில் உட்கார வைப்பதே சிரமம். வீட்டில் எப்படி அவர்கள் அமர்ந்து ஆசிரியர் சொல்வதை கேட்பார்கள் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாதவர்கள் பள்ளிகளை நடத்துவது வேதனையாக உள்ளது.
ஆன்லைனில் பாடம் நடக்கும் என்றால் பிறகு ஆசிரியர்கள் எதற்கு, ஆன்லைனில் ஏராளமான ஆசிரியர்கள் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அவற்றைப் பார்த்தே படித்துவிட்டு போய்விடலாமே… பள்ளி என்பதே மாணவர்கள் கட்டுப்பாடு, ஒழுக்கம், சமூக சார்ந்திருத்தல், தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளுதல் உள்ளிட்ட ஆளுமைத் திறன்களை வளர்ப்பதற்காகத்தான் உள்ளது. அந்த அடிப்படை நோக்கத்தை ஆன்லைன் வகுப்புகள் சிதைக்கும் வகையில் உள்ளது.

ப்ரீ கேஜி முதல் பிளஸ் 2 வரை மாணவர்களை வாட்டும் ஆன்லைன் வகுப்புகள்! – அரசு கட்டுப்படுத்துமா என்று மக்கள் ஏக்கம்கொரோனா ஊரடங்கு காரணமாக பலரும் தங்கள் வேலை இழந்து, வாழ்வாதாரம் இழந்து அவதியுறுகின்றனர். இந்த சூழ்நிலையில் இப்போதே முழு கட்டணத்தையும் கட்டியாக வேண்டும் என்று நெருக்கடி கொடுப்பது எல்லாம் பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். கர்நாடகாவில் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் அதுபோன்ற ஒரு உத்தரவை அரசு பிறப்பிக்குமா, பிறப்பித்தாலும் அதை முறையாக கண்காணிக்குமா என்ற எதிர்பார்ப்பு பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.