கொரோனா மைல்ட் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கும் பக்கவிளைவு… அதிர்ச்சி ஆய்வுத் தகவல்!

 

கொரோனா மைல்ட் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கும் பக்கவிளைவு… அதிர்ச்சி ஆய்வுத் தகவல்!

கொரோனா மிகத் தீவிர பாதிப்பை ஏற்படுத்தியவர்களுக்கு பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதயம், நுரையீரல், சிறுநீரகம், கண்கள், மூளையில் கூட பாதிப்பை ஏற்படுத்திவிட்டு மறைந்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், மைல்ட், மாடரேட் அளவு பாதிப்பு வந்தவர்களில் 10ல் ஒருவருக்கு நீண்ட கால பக்க விளைவுகள் வருவதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா மைல்ட் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கும் பக்கவிளைவு… அதிர்ச்சி ஆய்வுத் தகவல்!

மைல்ட் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களிடம் எட்டு மாதங்கள் கழிந்த நிலையில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 10ல் ஒருவருக்கு ஏதோ ஒரு வகையில் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திச் சென்றிருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பான ஆய்வுக்கட்டுரை JAMA என்ற மருத்துவ இதழில் வெளியாகி உள்ளது.

இந்த ஆய்வை மேற்கொண்ட ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கூறுகையில், “எங்கள் ஆய்வின் நோக்கம் கொரோனா வந்து சென்ற பிறகு நோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்தி எப்படி இருக்கிறது என்பதை அறிவதுதான். இதற்காக மைல்ட் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட இளைஞர்களிடம் ஆய்வு மேற்கொண்டோம். பலருக்கும் சுவை உணர்வு, வாசனை அறிவதில் சிக்கல் போன்ற குறுகிய கால பக்கவிளைவுகள் ஏற்பட்டது. அதன் பிறகு இவர்களுக்கு சோர்வு, சுவாசக் கோளாறுகள் அடிக்கடி ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

மொத்தம் 2149 பேரிடமிருந்து ரத்த மாதிரிகள் பெற்று ஆய்வு செய்தோம். இதில் 19 சதவிகிதம் பேருக்குத்தான் கோவிட் 19 ஆன்டி பாடி ஏற்பட்டிருப்பது தெரிந்தது.

கொரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து நான்கு மாத இடைவெளியில் இரண்டு முறை ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் அவர்களுக்கு வேறு வகையான உடல்நல பாதிப்பு ஏற்பட்டதும் அதன் காரணமாக வாழ்க்கைத் தரம் முன்பு இருந்த அளவுக்கு இல்லாமல் குறைந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு எட்டு மாதம் ஆன நிலையிலும் வாசனை திறன் மற்றும் சுவை திறன் குறைந்துவிட்டதாகவும், சோர்வு, சுவாசப் பிரச்னை அடிக்கடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். தற்போது தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில் ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று தீவிர பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்குத்தான் பல மாதங்கள் கடந்தும் பக்கவிளைவுகள் ஏற்படுவதாக இதுவரை ஆய்வாளர்கள் தெரிவித்து வந்தனர். ஆனால் தற்போது மைல்ட் மற்றும் மாடரேட் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கும் கூட பக்கவிளைவுகள் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை அதிகரிக்கச் செய்கிறது.