மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்துக்குள் பழைய ரூ.5,10,100 நோட்டுக்கள் திரும்பப்பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கருப்பு பணத்தை ஒழிக்க கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமலானது. அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு, புதிதாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தன. ஆனால், 2000 ரூபாய் நோட்டுகள் வந்தபிறகு கள்ள நோட்டுப் புழக்கமும், கருப்புப் பணமும் இன்னும் அதிகரித்துவிட்டதாகப் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனால் 2000 ரூபாய் நோட்டுக்கள் விநியோகம் தற்போதைக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மாறாக பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் புதிய 10 மற்றும் 20, 50 ரூபாய் நோட்டுகளும் புதிதாக விடப்பட்டன.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் மங்களூருவில் மாவட்ட வங்கிகள் இடையேயான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் மகேஷ், பழைய ரூ.5,10,100 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு அதற்கு பதிலாக புதிய ரூ.5,10,100 நோட்டுகள் அதிகளவில் புழக்கத்தில் விடப்படும் என தெரிவித்தார்.