‘ஓபிசி இட ஒதுக்கீடு’ ராமதாஸ் கோரிக்கை!!

 

‘ஓபிசி இட ஒதுக்கீடு’   ராமதாஸ் கோரிக்கை!!

தமிழகத்தில் மத்திய பொதுத்துறை நிறுவன தொழில் பழகுநர் நியமனங்களில் ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டை 76% ஆக உயர்த்த வேண்டும் என்று ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘ஓபிசி இட ஒதுக்கீடு’   ராமதாஸ் கோரிக்கை!!

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சென்னை உர நிறுவனத்திற்கு 45 தொழில் பழகுநர்களை தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறையில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு பெரும் சமூக அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. தொழில் பழகுநர் சட்டப் பிரிவுகளுக்கு முரணான வகையில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

சென்னை மணலியில் செயல்படும் சென்னை உர நிறுவனத்தில் 21 பட்டதாரி தொழில் பழகுநர்கள், 24 பட்டயதாரர் தொழில் பழகுநர்கள் என மொத்தம் 45 தொழில் பழகுநர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் மார்ச் 13-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

‘ஓபிசி இட ஒதுக்கீடு’   ராமதாஸ் கோரிக்கை!!

1961-ஆம் ஆண்டின் தொழில் பழகுநர் சட்டத்தில், கடந்த 2007 செப்டம்பர் 19-ஆம் தேதி செய்யப்பட்ட திருத்தத்தின்படி, 3 பி என்ற புதிய உட்பிரிவு சேர்க்கப்பட்டது. அதன்படி, மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் தொழில் பழகுநர்களை தேர்ந்தெடுக்கும் போது, சம்பந்தப்பட்ட பொதுத்துறை நிறுவனம் அமைந்துள்ள மாநிலங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எத்தனை விழுக்காடு வாழ்கின்றனரோ, அவ்வளவு விழுக்காடு இட ஒதுக்கீடு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட வேண்டும். 2011&ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் ஒ.பி.சி. மக்கள்தொகை 76% என குறிப்பிடப்பட்டிருப்பதால், 45 தொழில் பழகுனர்களை தேர்ந்தெடுப்பதில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 34 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 12 இடங்கள், அதாவது 27% இடங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த சமூக அநீதியை எந்த வகையிலும் ஏற்க முடியாது.

தொழில் பழகுநர் நியமனங்களில் ஓபிசி வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் அளவு குறைக்கப்பட்டதற்காக சென்னை உர நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்டிருக்கும் விளக்கமும் நியாயமானதல்ல. தொழில் பழகுநர் விதிகளில் 2015-ஆம் ஆண்டு ஜூன் 16-ஆம் தேதி திருத்தம் செய்யப்பட்டதாகவும், அதில் ஐந்தாவது பிரிவில் இரண்டாவது உட்பிரிவு புதிதாக சேர்க்கப்பட்டதாகவும், அதன்படி அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக ஓபிசி வகுப்பினருக்கு 27% மட்டும் தான் இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்பது தான் சென்னை உர நிறுவனம் அளித்துள்ள விளக்கமாகும். பொதுத்துறை நிறுவனங்களில் உள்ளூர் மாணவர்களுக்கு தான் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற நிலையில், அந்தந்த மாநிலங்களின் மக்கள்தொகை அடிப்படையில் தான் ஓபிசி இட ஒதுக்கீடு நிர்ணயிக்கப்பட வேண்டும். இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான ஓபிசி ஒதுக்கீடு என்பது சமூகநீதியாக இருக்காது.

‘ஓபிசி இட ஒதுக்கீடு’   ராமதாஸ் கோரிக்கை!!

அதுமட்டுமின்றி, சட்டத்தின் அடிப்படையில், சட்டத்தின் நோக்கம் மீறப்படாத வகையில் தான் விதிகள் வகுக்கப்பட வேண்டும். உள்ளூர் மக்கள்தொகை அடிப்படையில் ஓபிசி இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது தான் சட்டம் எனும் நிலையில், அதற்கு முற்றிலும் எதிரான வகையில் எவ்வாறு விதிகளை வகுக்க முடியும்? சட்டம் என்பது நாடாளுமன்றத்தால் இயற்றப்படுவது, விதிகள் அதிகாரிகளால் வகுக்கப்படுபவை. நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தை மீறி அதிகாரிகள் விதிகளை வகுத்தால், அதற்கு காரணமான அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டுமே தவிர, அந்த விதிகள் பின்பற்றப்பட வேண்டியவை அல்ல.

1961-ஆம் ஆண்டின் தொழில் பழகுநர் சட்டத்தின் 37-ஆவது பிரிவின் முதலாவது உட்பிரிவின்படி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை மீறி செயல்படும் அதிகாரம் யாருக்கும் வழங்கப்படவில்லை. எனவே, ஒவ்வொரு மாநிலத்திலும் ஓபிசி மக்கள்தொகைக்கு இணையாக ஓபிசி இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற சட்டத்திற்கு எதிராக வகுக்கப்பட்ட தொழில் பழகுநர் விதிகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் தொழில் பழகுநர்களை தேந்தெடுக்கும் போது பிற பிற்படுத்தப்பட்டோருக்கு 76% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதையும், தொழில் பழகுநர் இடங்கள் முழுக்க முழுக்க உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமே வழங்கப்படுதையும் உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.